மல்டிப்ளக்ஸ் கலாச்சாரத்துக்கு மாறும் கோலிவுட்: ‘செக்கச்சிவந்த வானம்’ முதல் ‘`வரை

மாற்றம் எனும் காற்று கோலிவுட்டில் வீசி வருகிறது. கமர்ஷியல் வடிவத்துக்குள் நல்ல கதைகள் தமிழ் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. முதலீட்டுக்குப் பாதுகாப்பு என்று நினைக்கப்பட்ட ஃபார்முலா படங்கள், வசூலில் சோபிப்பதில்லை.

பாலிவுட்டைப் போலவே கோலிவுட்டிலும் மல்டிப்ளக்ஸ் கலாச்சாரம் வழி செல்கிறதா? ஆம் என்றே தோன்றுகிறது. கடந்த ஒரு மாதத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற படங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். ‘செக்கச்சிவந்த வானம்’, ‘பரியேறும் பெருமாள்’, ‘96’, ‘ராட்சசன்’, ‘வடசென்னை’. இந்தப் படங்கள் எல்லாம் ஒவ்வொன்றும் ஒரு வகை. கடும் போட்டிக்கு நடுவில் இந்தப் படங்கள், அதற்கான ரசிகர்களைக் கண்டடைந்துள்ளன.

     

சென்னை, செங்கல்பட்டு, கோவை என மூன்று நகரங்களில்தான் இந்தப் படங்கள் முக்கியமாக வசூலித்துள்ளன. ஐந்து வருடங்களுக்கு முன் திரையரங்க வசூலில் இந்த மூன்று நகரங்களின் பங்கு 35% முதல் 40% வரை. இன்று, மாநிலத்தில் அதிகரித்து வரும் மல்டிப்ளக்ஸ் திரைகளின் காரணமாக, இந்தப் பங்கு 55% முதல் 60% என அதிகமாகியுள்ளது.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இந்த மூன்று நகரங்களில் 80 புதிய திரைகள் சேர்ந்துள்ளன. பழைய திரையரங்குகள் இடிக்கப்பட்டு, மல்டிப்ளக்ஸ்கள் கட்டப்படுகின்றன. காரணம், ரசிகர்கள் நல்ல சுகாதாரமான சூழலில், நல்ல திரை மற்றும் ஒலித் தரத்துடன் படம் பார்க்க ஆசைப்படுகின்றனர். அண்ணா நகரில் திறக்கப்பட்டுள்ள பிவிஆர் ஐகான் அரங்கும், மதுரவாயலில் திறக்கப்பட்டுள்ள ஏஜிஎஸ் அரங்கும் பல ரசிகர்களை ஈர்த்துள்ளன.

தனித் திரைகளில் இருந்து மல்டிப்ளக்ஸுக்கான மாற்றத்தை, தமிழகம் முழுவதும் பார்க்க முடியும். ஒரே கட்டிடத்துக்குள் பல திரைகள் எனும்போது, ரசிகர்களுக்குப் பார்ப்பதற்கான தேர்வுகள் அதிகமாகின்றன. இதனால்தான் கிட்டத்தட்ட ஒரே காலகட்டத்தில் வெளியான ஐந்து படங்களுக்கும் திரைகளும் வரவேற்பும் கிடைத்தன.

விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளரான எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன் பேசுகையில், “நகரங்களில் மட்டுமல்ல. புறநகர் மற்றும் கிராமப்புறங்களில் கூட, நல்ல தரத்தில் இருக்கும் திரையரங்குகளுக்கு மக்கள் செல்கின்றனர். மக்களின் கருத்துகளும் மாறி வருகிறது. உங்களுக்கு ஒன்று தெரியுமா? ‘செக்கச்சிவந்த வானம்’ படம்தான் வட ஆற்காடு மற்றும் தென் ஆற்காடு பகுதிகளில் அதிகம் வசூலித்த படம். இதற்கு முன் வந்த எந்த மணிரத்னம் படங்களும் இந்தப் பகுதியில் இவ்வளவெல்லாம் வசூலித்ததில்லை" என்றார்.

விஜய் சேதுபதியின் ‘96’, தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதன் பங்கு மட்டுமே ரூ.12 கோடியில் இருந்து ரூ.14 கோடி வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 55% - 60% வருவாய் மல்டிப்ளக்ஸில் இருந்து மட்டும் வருகிறது.

“நான் நடிக்க ஆரம்பித்தபோது தனித் திரையரங்குகள்தான் நிறைய இருந்தன. இன்று, ‘96’ உள்ளிட்ட இந்தப் படங்களின் வெற்றியைப் பார்க்கும்போது, மல்டிப்ளக்ஸ்கள்தான் எதிர்காலம் என்பது நிரூபணமாகிறது. அந்த ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப நாம் படம் எடுக்க வேண்டும்” என்கிறார் நடிகர் விஜய் சேதுபதி.

‘96’ படத்துடன் வெளியான ‘ராட்சசன்’ படமும் பெரும் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் ரூ.10 கோடி வரை பங்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இந்தப் படங்கள் ஹிட் ஆனதற்கு அவற்றின் கதையும், ரசிகர்களின் ஆதரவுமே காரணம். புது மல்டிப்ளக்ஸ்களின் வருகைக்கு நன்றி. இது திரையரங்குக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. ஆம், தமிழ் சினிமா மாறி வருகிறது. ரசிகர்களின் ரசனை முதிர்ச்சியடைந்துள்ளது. நெட்ப்ளிக்ஸ், அமேசான் உள்ளிட்ட தளங்களால் அவர்களுக்கு உலக சினிமா பற்றித் தெரிந்திருக்கிறது. நான் எதிர்காலத்தில் நடிக்கும் படங்களில் கதைக்கே அதிக முக்கியத்துவம் இருக்கும், மல்டிப்ளக்ஸ் ரசிகர்களைக் குறிவைத்தே எடுக்கப்படும்" என்கிறார் நடிகர் விஷ்ணு விஷால்.

தமிழ்ப் படங்கள் எப்படி உருவாக்கப்படுகின்றன, அதற்கான ரசிகர்களிடம் எப்படி சேர்கின்றன? என்பதில் சமூக ஊடகத்தின் பங்கும் உள்ளது.

விஜய்யின் ‘சர்கார்’ டீஸர் சர்வதேச அளவில் வைரல் ஆனது. பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. எடிட்டர் ஸ்ரீகர் பிரசாத் தான் அந்த டீஸரை எடிட் செய்தவர். அது விஜய்க்கு ஒரு நவீன இமேஜை ஏற்படுத்தியுள்ளது.

“பாலிவுட்டைப் போல, தமிழ் சினிமா கொஞ்சம் கொஞ்சமாக மல்டிப்ளக்ஸைச் சுற்றி நகர்கிறது. தனித் திரையரங்குகளை விட 35% - 40% அதிக டிக்கெட் விலை இருக்கும் மல்டிப்ளக்ஸில் ரசிகர்கள் பணம் செலவிடுகின்றனர். அவர்களுக்கான படத்தை எடுக்க இயக்குநர்களை ஊக்குவிக்கிறார்கள். இது தமிழ் சினிமாவுக்கு நல்லதுதான். ஏனென்றால், நமது தரம் உயரும்” என்கிறார் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்.

Google+ Linkedin Youtube