ஒவ்வொரு கதையையும் தன் குழந்தையைப் போல உருவாக்குவார் ஏ.ஆர்.முருகதாஸ்: ‘ஸ்பைடர்’ தயாரிப்பாளர்

ஒவ்வொரு கதையையும் தன் குழந்தையைப் போல மெனக்கெட்டு உருவாக்குவார் ஏ.ஆர்.முருகதாஸ் என ‘ஸ்பைடர்’ படத்தின் தயாரிப்பாளர்

தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தில், கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம், கதைத் திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். இதற்கு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்துள்ளார். ‘சர்கார்’ படத்தில் பணிபுரிந்துள்ள எழுத்தாளர் ஜெயமோகனும் இப்படம் எப்படி உருவானது என்று தெரிவித்திருக்கிறார். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நாளை (அக்.30) வரவுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்த ‘ஸ்பைடர்’ படத்தை தயாரித்தவர் தாகூர் மது. அவரும், ‘சர்கார்’ விவகாரத்தில் ஏ.ஆர்.முருகதாஸுக்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “தனிப்பட்ட முறையிலும் தொழில் நிமித்தமாகவும் நான் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைந்து பயணித்திருக்கிறேன். கடந்த 18 ஆண்டுகளில் நான் அவர் இயக்கிய 5 படங்களைத் தயாரித்திருக்கிறேன்.

அவர் ஓர் அறிவுஜீவி. அவ்வளவு ஒழுக்கமான திரைவாசி. 18 ஆண்டுகளில் ஒருமுறைகூட அவர் நேரம் தவறியதில்லை. அது கதை ஆலோசனையாக இருக்கட்டும் அல்லது படப்பிடிப்பாக இருக்கட்டும்... குறித்த நேரத்தில் இருப்பார். அவருடைய துடிப்பு எனக்குத் தெரியும். ஒவ்வொரு கதையையும் சீனையும் தன் குழந்தையைப் போல் மெனக்கெட்டு உருவாக்குவார்.

அவர்தான் அவருடைய கதைகளை எழுதுகிறார். மிகவும் சாதாரணமானவர், எளிமையானவர். அவரைப் பற்றிய மாற்றுச் சிந்தனைக்கே இடமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube