‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரம்: குடும்பத்துடன் நாளை உண்ணாவிரதம் இருக்க அன்பு ராஜசேகர் முடிவு

‘கத்தி’ கதைத் திருட்டு விவகாரத்தில், குடும்பத்துடன் நாளை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளதாக அன்பு ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள இளவங்காடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பு ராஜசேகர். இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் உறவினரான இவர், விவசாயத்தை மையமாக வைத்து ‘தாக பூமி’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

 

இந்தக் குறும்படத்தின் கதையை மூலமாக வைத்துதான் ‘கத்தி’ படத்தை எடுத்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ் என்று வழக்கு தொடர்ந்துள்ளார் அன்பு ராஜசேகர். “முருகதாஸ் உதவி இயக்குநர்களைத் தேடிக் கொண்டிருந்தபோது, ‘தாக பூமி’ குறும்படத்தையும், என்னுடைய விவரங்களையும் மெயிலில் அனுப்பி வைத்தேன்.

அந்தக் கதையைத்தான் ‘கத்தி’ படமாக எடுத்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதுகுறித்து படத்தைத் தயாரித்த லைகா நிறுவனம், விஜய், முருகதாஸுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். தஞ்சாவூர் நீதிமன்றத்தில் காப்புரிமை வழக்கு நடைபெற்று வருகிறது.

எனக்கு நீதி கிடைக்கும்வரை ‘சர்கார்’ படத்துக்குத் தடைவிதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் சமரசத் தீர்ப்பு குறித்துப் பேசிய அவர், “உதவி இயக்குநராக நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை நான் வரவேற்கிறேன். நான் 4 வருடங்களாகப் போராடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. இனிவரும் காலங்களில், இதுபோன்ற நடவடிக்கைகளால் சிந்தனைத் திருட்டு தடுக்கப்படும் என நம்புகிறேன்.

சட்ட ரீதியாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். ஆனால், எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. நாளை (அக்டோபர் 31) என்னுடைய குடும்பத்துடன் வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன். தொடர்ச்சியாக முருகதாஸ் சாரைத் தொந்தரவு செய்ய வேண்டும் என நான் நினைக்கவில்லை.

வருண் ராஜேந்திரன் கேட்டதுபோல, மூலக்கதை என்று என் பெயரைப் போட வேண்டும் என்றுதான் முருகதாஸிடம் கேட்டேன். படைப்பாளிக்கான அங்கீகாரத்தைக் கொடுங்கள் என்றுதான் கேட்டேன். ஆனால், எனக்கான அங்கீகாரம் மறுக்கப்பட்டது.

‘கத்தி’ படம் தமிழில் ரிலீஸாகி 4 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது, தெலுங்கில் கூட சிரஞ்சீவி நடித்து வெளியாகி 2 வருடங்களாகி விட்டது. இனிமேல் மூலக்கதை என்று என் பெயரைப் போடுவதில் எந்தப் பயனும் இல்லை. ஆனாலும், ‘தாக பூமி’ குறும்படத்தில் இருந்துதான் ‘கத்தி’ படம் எடுக்கப்பட்டது என முருகதாஸ் வெளிப்படையாக அறிக்கை வெளியிட வேண்டும். அதைத்தான் நான் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube