குஜராத்தில் படேல் சிலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தவறான மொழிபெயர்ப்புடன் கூடிய ‘தமிழ் வாசகப் பலகை’ போலியானது: அதிகாரிகள் தகவல்

குஜராத்தில் உள்ள உலகிலேயே மிகவும் உயரமாக அமைக்கப்பட்டுள்ள சர்தார் படேலின் ‘ஒற்றுமையின் சிலை’ என்பது தமிழில் தவறாக ‘மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக சர்ச்சை வெளியான நிலையில் அது பொய்யானது, போலியாக உருவாக்கி பரப்பி விடப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் ‘இரும்பு மனிதர்’ என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேலுக்கு குஜராத் மாநிலத்தில் நர்மதா ஆற்றின் சர்தார் சரோவர் அணைக்கு அருகே, ஆற்றுத் தீவான சாதுபேட் என்ற இடத்தில் சிலை நிறுவப்பட்டுள்ளது.

“ஒற்றுமையின் சிலை” என்ற பெயரில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை 182 மீட்டர் உயரமுள்ளது. இந்தப் பிரம்மாண்ட சிலையைப் பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இந்தச் சிலையின் வளாகத்தில் உள்ள பலகையில் ‘தி ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி’ (The Statue of Unity) என்ற வாசகம் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இருந்தது.

அதில் தமிழில் ஒற்றுமையின் சிலை என்று இல்லாமல் ‘ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி’ என தவறாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் படங்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.

தமிழ் மொழியில் மட்டும் தவறாக எழுதப்பட்டு, மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் கண்டனத்தைப் பதிவு செய்து விமர்சித்தனர்.

உலகிலேயே மிக உயரமான சிலை எனப் புகழப்படும் சர்தார் வல்லபாய் படேலின் சிலையில் தமிழ் மொழியில் மட்டும் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளது அதிகாரிகளின் கவனக்குறைவு எனச் சுட்டிக்காட்டியுள்ள நெட்டிசன்கள், அதனைத் திருத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

இந்நிலையில், சிலை திறப்பின்போது ‘தி ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி’ என்ற வாசகம் அடங்கிய பலகை அங்கு வைக்கப்படவில்லை. அது பொய்யான தகவல் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சர்தார் சரோவர் நர்மதா நிகம் பகுதியைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவரிடம் இது குறித்து கேட்டபோது, அவர் கூறுகையில், “ சர்தார் சிலை அருகே ‘தி ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி’ என்ற வாசகம் அடங்கிய பலகையில் தமிழ் மொழி தவறாக மொழிபெயர்க்கப்பட்டு இருப்பதாகச் சமூக ஊடகங்களில் வரும் செய்தி தவறானது. போலியானது. அவ்வாறு எந்தவிதமான பலகையும் அங்கு வைக்கப்படவும் இல்லை. யாரும் அந்தப் பலகையை கீழே இழுத்துப்போடவும் இல்லை.

சர்தார் வல்லவாய் படேலுக்கு மிகப்பெரிய மரியாதை செய்யும் நிகழ்ச்சியின் உண்மையான தோற்றத்தைச் சிதைக்கும் வகையில் சில விஷமிகள் இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ‘தி ஸ்டேச்சு ஆஃப் யூனிட்டி’ என்ற வார்த்தைக்குத் தமிழில் தவறாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இருப்பதாகப் போலியாக சித்தரித்துப் பரப்பி இருக்கிறார்கள்.

உண்மையான பெயர்ப் பலகையில் சிலையின் “லோகோ”வும், மத்திய அரசின் திட்டம் என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அந்நிய நாட்டு மொழிகளில் இதுபோன்ற மொழிபெயர்ப்புடன் பலகை வைக்கும் எண்ணம் இதற்குமுன் இருந்ததும் இல்லை, எதிர்காலத்திலும் இதுபோன்ற திட்டம் இல்லை. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்துக்கு வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக ரஷ்யா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்க்கவில்லை. ஒருவேளை அங்கு பெயர்ப் பலகை வைக்கப்படும் பட்சத்தில் அந்த பெயர்ப் பலகையில் தேசத்தின் ஒற்றுமையைக் குறிப்பிடும் வகையில் அனைத்து இந்திய மொழிகளும் இடம் பெறும்''.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

Google+LinkedinYoutube