'சர்கார்' படத்துக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

'சர்கார்' பட டிக்கெட்டுகள் ரூ.500, 1000 என இணையதளத்தில் விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து அதிக விலைக்கு டிக்கெட்டுகளை விற்றால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பண்டிகை நேரங்களில், முக்கிய காலகட்டங்களில் பிரபலமான நடிகர்களின் படம் வரும் நேரத்தில் ரசிகர்களின் ஆர்வத்தைப் பயன்படுத்தி அந்தக் காலத்தில் பிளாக்கில் டிக்கெட் விற்பார்கள். தற்போதைய அதி நவீன விஞ்ஞான யுகத்தில் ஆன்லைன் விற்பனை என்கிற யுக்தி மூலம் ரூ.500 முதல் 1000 ரூபாய் வரை டிக்கெட்டுகளை விற்பதும், கூடுதல் காட்சிகளை ஓட்டுவதும் நடக்கிறது.

இதுகுறித்து ஏற்கெனவே உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு விஜய்யின் 'சர்கார்' படம் திரைக்கு வருகிறது. பெருத்த எதிர்பார்ப்புடன் வரும் 'சர்கார்' வணிக ரீதியாக பெரிய சாதனை படைத்துள்ளது.

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்த மகேந்திரபாண்டி என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தீபாவளியை ஒட்டி, நவ. 6-ம் தேதி நடிகர் விஜய் நடித்த சர்கார் படம் வெளியாகிறது. மதுரையில் ஐந்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாகிறது.

இப்படத்துக்கான ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைனில் ஒரு டிக்கெட் ரூ. 500 முதல் ரூ.1000 வரை விற்கப்படுகிறது. இவ்வளவு கூடுதல் கட்டணம் வசூலிப்பது அப்பட்டமான விதிமீறல்.

சட்டப்படி மல்டி பிளக்ஸ் திரையரங்கில் ரூ.50 முதல் ரூ. 150 வரையும், மற்ற திரையரங்குகளில் ரூ.40 முதல் நூறு ரூபாய் வரையும், ஏசி திரையரங்குகளில் குறைந்தபட்சம் ரூ.80 வரையும் கட்டணம் வசூலிக்கலாம். இந்த அரசாணையை பின்பற்றாமல் பல மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர்.

மதுரை மாவட்டத்தில் சர்கார் படம் வெளியாகும் திரையரங்குகளில் சினிமா டிக்கெட் கட்டணம் தொடர்பாக 2017- ம் ஆண்டில் உள்துறை செயலாளர் பிறப்பித்த அரசாணை அடிப்படையில் கட்டணம் வசூலிக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் 'சர்கார்' படம் வெளியாகும் திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் திடீர் தணிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.

மதுரையில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் தியேட்டர் உரிமத்தை ரத்து செய்யலாம், 'சர்கார்' படம் வெளியாக உள்ள தியேட்டர்களில் கட்டணம் பற்றி தணிக்கைக்குழு ஆய்வு செய்யவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Google+LinkedinYoutube