‘‘ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக் கொண்டேன்’’ - பெண் பத்திரிகையாளர் மீடூ புகாருக்கு எம்.ஜே. அக்பர் பதில்; மனைவியும் ஒப்புதல்

பாலியல் துன்புறுத்தல் செய்ததாக  பெண் பத்திரிகையாளர் அளித்த புகாருக்கு, அவரின் ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக் கொண்டேன் என முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் பதில் அளித்துள்ளார். எம்.ஜே. அக்பரின் மனைவியும் இதனை ஆமோதித்துள்ளார்.

பெண்கள் தாங்கள் பாலியல் ரீதியாகச் சீண்டல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் ஆளானதை #MeToo ஹேஷ்டேக் மூலம் ட்விட்டர் தளத்தில் பதிவிட்டு வெளியிட்டு வருகின்றனர். அந்தவகையில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகைத் துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்ட மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பெண் பத்திரிகையாளர்கள் பலர் பாலியல் புகார்களைத் தெரிவித்துள்ளனர்.

அதில் மின்ட் லாங்க் ஆசிரியர் பிரியா ரமணி, அமெரிக்க பத்திரிகையாளர் மஜ்லி டி பு காம்ப், போர்ப்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் கஜாலா வஹாப் உள்ளிட்ட பலர் அடங்குவர். அடுத்தடுத்த புகாரால் எம்.ஜே. அக்பர் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார். இதுபோலவே தற்போது அமெரிக்காவில் வசிக்கும் பெண் பத்திரிக்கையாளரான பல்லவி கோகோய், 23 வயதில் தான், அக்பருடன் இணைந்து பணியாற்றியபோது, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக புகார் கூறினார். அவரது பேட்டி அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கையில் வெளியானது

இந்தநிலையில் பத்திரிக்கையாளர் பல்லவி கோகோய் அளித்த புகார் குறித்து எம்.ஜே. அக்பர் இன்று விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

‘‘பத்திரிக்கையாளர் பல்லவி கோகாய் கூறியுள்ள புகாரில் எதுவும் உண்மையில்லை. இதுபோன்று யாரையும் நான் பாலியல் துன்புறுத்தல் செய்யவில்லை. அவருடன் ஒப்புதலுடன் தான் உறவு வைத்துக் கொண்டேன். சில மாதங்கள் இது தொடர்ந்தது. எனினும் இதனால் என் குடும்பத்திலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் எழுந்தன. இதையடுத்து அந்த உறவை கைவிட்டு விட்டேன்’’ எனக் கூறியுள்ளார்.

எம்.ஜே. அக்பர் மனைவி ஒப்புதல்

இதுகுறித்து எம்.ஜே. அக்பரின் மனைவி மல்லிகாவும் தனியாக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், மல்லிகா கூறுகையில் ‘‘வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் வெளியாகியுள்ள கட்டுரையில் பல்லவி கோகோய் கூறியுள்ள தகவல்கள் முழுமையான பொய். 1994-ம் ஆண்டு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பல்லவி கோகாயால் எங்கள் வீட்டில் சண்டையும், சச்சரவுகளும் எழுந்தன.

பின் இரவுகளுக்கு பிறகும் எனது கணவருக்கு அவரிடம் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வெளியிடங்களில் இருந்து வரும் தகவல்கள் மூலம் பல்லவி கோகாய் பற்றி எனக்கு தெரிய வந்தது. பல்லவி எதனால் பொய் சொல்கிறார் என தெரியவில்லை. எனினும் அவர் கூறுவது முழுமையான பொய்’’ என மல்லிகா கூறியுள்ளார்.

Google+LinkedinYoutube