கழிவறையில் குழந்தைப்பெற்று வீசிவிட்டுச் சென்ற பெண்: அவரிடமே மீண்டும் குழந்தையை ஒப்படைத்த போலீஸாரின் அலட்சியம்

அவரை கண்டுபிடித்த போலீஸார் மீண்டும் அந்தப்பெண்ணிடமே குழந்தையை ஒப்படைத்த அலட்சிய நிகழ்வு நடந்துள்ளது.

சென்னை சூளைமேட்டில் சௌராஷ்ட்ரா நகர் 7வது தெருவில் தனியார் மருத்துவமனை ஒன்று உள்ளது. நேற்றிரவு இந்த தனியார் மருத்துவமனைக்கு ஒரு இளம்பெண் மற்றும் அவரது உறவினர்கள் 5 பேர் வந்தனர். இளம்பெண்ணுக்கு வயிற்று வலி என்று சிகிச்சைக்காக வந்தனர். சிகிச்சையில் இருந்த நேரம் கழிவறைக்கு சென்ற அப்பெண் பின்னர் வெளியே வந்துள்ளார்.

அதன் பின்னர் அந்தப்பெண்ணும் உடன் வந்தவர்களும் அங்கிருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளார். மருத்துவமனை ஊழியர்களும், செவிலியர்களும் பின்னர் அவர்களைப்பற்றி யோசிக்கவில்லை.

அதிகாலையில் கழிவறையில் உள்ள பக்கெட்டில் இருந்து குழந்தை அழும் சப்தம் கேட்டுள்ளது, இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், செவிலியர்கள் உள்ளேச்சென்று பார்த்துள்ளனர். பக்கெட்டில் பிறந்து சிலமணி நேரமே ஆன ஆண்குழந்தை ஒன்று வீரிட்டு அழுதபடி இருந்துள்ளது. உடனடியாக குழந்தையை தூக்கி அதற்குரிய சிகிச்சை அளித்த செவிலியர்களுக்கு குழந்தை எப்படி வந்தது என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டது.

குழந்தை யாருடையது என யோசித்தவர்களுக்கு இரவு வயிற்றுவலி என ஒரு இளம்பெண்ணும் 5 உறவினர்களும் மருத்துவமனைக்கு வந்ததும் பின்னர் அவர்கள் காணாமல் போனதும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை சோதித்தபோது அதில் கழிவறைக்கு கடைசியாக சிகிச்சைக்கு வந்த இளம்பெண் செல்வது தெரிந்தது.

இதையடுத்து போலீஸாருக்கு மருத்துவமனை நிர்வாகம் புகார் அளித்தது. போலீஸார் வந்து சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் அந்த இளம்பெண் அதே பகுதியில் வசிக்கும் ராதா (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், அவர் வழக்கறிஞர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் வரவழைத்து விசாரணை நடத்தினர்.

தான் வயிற்றுவலிக்காக வந்தேன் இது என் குழந்தையே இல்லை, நான் கர்ப்பிணியே இல்லை என்று அவர் சாதித்தார். போலீஸார் சிசிடிவி காட்சிகளை போட்டுக்காட்டி விசாரணை நடத்தினர். ஒரு பெண் குழந்தை பெற்றாரா இல்லையா என இங்குள்ள செவிலியர்கள் சில நிமிடங்களில் நிரூபித்து விடுவார்கள் என்று போலீஸார் அவர்கள் பாணியில் கூறியதும் வழிக்கு வந்த அந்த பெண் வழக்கறிஞர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

குழந்தை எப்படி உருவானது என்பது குறித்தும், 10 மாதமும் என்ன செய்தார் என்பது குறித்தும், குழந்தையை ஏன் வீசிவிட்டுச் சென்றார் என்பது குறித்தும் அவர் கூறிய கதையை கேட்ட போலீஸார் இதை நம்புவதா? நம்பாமல் போவதா எங்களுக்கு தெரியவில்லை, குழந்தையை இப்படி வீசிவிட்டுச் செல்லலாமா? என்று கூறி குழந்தையை அந்தப்பெண்ணிடமே கொடுத்து அனுப்பியுள்ளனர்.

இது குறித்து காவல் நிலையங்களில் குழந்தைகள் குறித்த வழக்குகளை கையாளும் விதம் குறித்து பயிற்சி அளித்த பேராசிரியர் ஆண்ட்ரூ ஜேசுராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

குழந்தையை வீசிவிட்டு சென்றது சட்டப்படி குற்றம், அவ்வாறு வீசிவிட்டுச் செல்லும் மனநிலையில் உள்ள பெண்ணால் அந்தக்குழந்தையின் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்து அவரிடமே குழந்தையை ஒப்படைத்த போலீஸாரின் அலட்சியத்தால் குழந்தையின் உயிருக்கே ஆபத்து நேரலாம், சட்டப்படி போலீஸார் குழந்தை நலக் குழுமத்தினருக்கு புகார் அளித்து அவர்கள் மூலம் அந்தப்பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுத்து அவர்கள் மேற்பார்வையில் குழந்தை ஒப்படைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஒருவேளை குழந்தை அந்தப்பெண்ணுக்கு தேவை இல்லை என்றால் சட்டப்படி அதை அவர் குழந்தை நலக் குழுமத்திடமே ஒப்படைக்கலாம், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் குழந்தைகள் தொடர்பான குற்றங்களை விசாரிக்க அதற்கென ஒரு எஸ்.ஐ குழந்தைகள் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார், அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.

காவல் நிலையங்களில் பிரத்யோகமாக குழந்தைகள் நல அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள காவல்நிலைய உதவி ஆய்வாளர்களுக்கான புத்தாக்க பயிற்சி ஒருமுறை கொடுப்பதால் பயனில்லை. அது தொடர்ந்து கொடுக்கப்பட்டால் மட்டுமே இதுபோன்ற விஷயங்கள் தவிர்க்கப்படும்.

இதுகுறித்து சூளைமேடு காவல்நிலைய குழந்தைகள் நல அலுவலராக இருக்கும் உதவி ஆய்வாளரை தொடர்புக்கொண்டபோது அவர் தொடர்புக்கு வரவில்லை.

Google+ Linkedin Youtube