பிளஸ்டூ மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியை: பெற்றோர் போலீஸில் புகார்

மேற்கு முகப்பேரில் தனியார் பள்ளி ஒன்றில் பயிலும் பிளஸ்டூ மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியை ஒருவர் மீது பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை மேற்கு முகப்பேரில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இங்கு பிளஸ்டூ மாணவர்களுக்காக கம்ப்யூட்டர் வகுப்புகள் எடுக்கப்படுகிறது. இதில் ஆசிரியையாக இருப்பவர் திவ்யா (40). இவர் வகுப்பில் பயிலும் மாங்காட்டைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவர் ராஜா (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தினமும் வகுப்புக்கு வரும்போது திவ்யா மாணவர் ராஜாவிடம் வேறுமாதிரி பேசியுள்ளார்.

மாணவர், ஆசிரியை உறவைத்தாண்டி மாணவரிடம் திவ்யா தவறாக பேசுவதும் நடப்பதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட ராஜா பெற்றோரிடம் புகார் அளிக்க பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர். இதை விசாரித்த பள்ளி நிர்வாகம் புகார் உண்மை என தெரிந்து கம்ப்யூட்டர் ஆசிரியை திவ்யாவை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

இந்நிலையில் பணியிடை நீக்கத்தில் இருந்தாலும் திவ்யா தொடர்ந்து மாணவர் ராஜாவுக்கு போன் மூலம் பேசுவதும், மெசேஜ் அனுப்புவதும் வாடிக்கையாக இருந்துள்ளது. இதைக்கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து ஆசிரியை திவ்யா தனது மகனுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக நொலம்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை அடுத்து போலீஸார் ஆசிரியை திவ்யாவை தேடினர்.

அவர் கேரளா சென்றிருப்பதாக தகவல் வரவே அவரை விசாரணைக்காக சென்னை வர போலீஸார் தகவல் கொடுத்துள்ளனர். விசாரணைக்கு பின்னரே அவர்மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெரியவரும். ஆண் ஆசிரியர்களால் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொந்தரவு புகார்கள் வரும் நேரத்தில் இதுபோன்ற பெண் ஆசிரியைமூலம் மாணவர்களிடமிருந்து புகார் வருவது போலீஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Google+LinkedinYoutube