ராஜபக்‌சவுக்கு ஆதரவில்லை: எதிர்த்து வாக்களிக்க போவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சவுக்கு எதிராக, வாக்களிக்க உள்ளதாக இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் அரசியல் நிலவரம் சிக்கலாகி வருகிறது. பெரும்பான்மை ஆதரவுடன் ஆட்சி செய்துவந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த வாரம் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனா திடீரென நீக்குவதாக அறிவித்து முன்னாள் ஜனாதிபதி ராஜபக்‌ஷேவை பிரதமராக அறிவித்து பதவி ஏற்பும் நடத்தி வைத்தார்.

இதையடுத்து இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கை அரசியலில் ஏற்பட்ட மாற்றம் மற்றும் தேர்தலில் தோல்வி அடைந்து விரட்டப்பட்ட ராஜபக்‌ச கொல்லைபுற வழியாக பிரதமராக பதவி ஏற்றதும் தமிழக அரசியல்வாதிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. தமிழர்களுக்கு எதிரான மனோபாவம் கொண்ட ராஜபக்‌சவின் ஆட்சியில் ஈழத்தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட துயரம் இன்னும் நீங்காத நிலையில் மீண்டும் ராஜபக்‌சஅதிகாரத்திற்கு வருவதை தமிழக அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் தனக்கு முழு மெஜாரிட்டி இருப்பதால் தன்னை நீக்கம் செய்தது செல்லாது என்று ரனில் போர்க்கொடி தூக்கி வருகிறார். அவருக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டத்தில் லட்சக்கணக்கானோர் கலந்துக்கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ரனில் மீண்டும் பதவிக்கு வந்தால் ஒரு கணம்கூட நான் பதவியில் இருக்க மாட்டேன் என்று ஜனாதிபதி சிரிசேனா தெரிவித்திருந்தார்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்த இடங்கள் 225, இதில் 113 இடங்களைப் பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். கடந்த 2015 நாடாளுமன்றத் தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவின் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி 106 இடங்களைக்கைப்பற்றியது. 113 என்கிற அறுதிப் பெரும்பான்மையைப் பெறத் தவறியதால், 16 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவை வழங்க முன்வந்ததை அடுத்தும் ரணில் விக்கிரமசிங்கே ஆட்சி அமைத்தார். தற்போது ரனில் கட்சிக்கு 122 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளது.

மைதிரிபால சிரிசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 95 இடங்களை மட்டுமே பெற்றது. தற்போது ஜனாதிபதி சிறிசேனா அதிகாரத்தைப் பயன்படுத்தி ரனில் விகரமசிங்கேவை நீக்கிவிட்டு ராஜபக்‌ஷேவை நியமித்துள்ளார். வரும் 5-ம் தேதி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. இதில் வெற்றிபெற வேண்டுமானால் 113 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆனால் 95 உறுப்பினர்கள் ஆதரவு மட்டுமே ராஜபக்‌ஷேக்கு உள்ளது.

இந்நிலையில் ரனில் விக்ரமசிங்கேவை ஆதரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒரு உறுப்பினரை இழுத்து அவருக்கு அமைச்சர் பதவியை ராஜபக்‌சவழங்கினார். ஆனாலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரையும் இழுக்க முடியவில்லை. இந்நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரின்று நடத்திய கூட்டத்தில் ராஜபக்‌ஷேக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரிக்க முடிவெடுத்துள்ளனர்.

இன்று கூடிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை அறிக்கையாக தமிழில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

“கடந்த, அக்டோபர் 26 ஆம் தேதி ஜனாதிபதி சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சி தலைவர்களின் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கூடி ஆராய்ந்து பின்வரும் தீர்மானங்களை எடுத்துள்ளது.

1. இலங்கை அரசியலமைப்பின்படி பதவியிலிருக்கும் பிரதம மந்திரியை பதவி நீக்கம் செய்தவற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் இல்லை. 19-ம் திருத்தத்திற்கு முன்னர் ஜனாதிபதிக்கு கொடுக்கப்பட்டிருந்த அந்த அதிகாரம், 19-ம் திருத்தத்தின் மூலம் திட்ட வட்டமாக நீக்கப்பட்டது. ஆகையால் பிரதம மந்திரியை நீக்குவதாகவும், வேறொரு பிரதமரை நியமிப்பதாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்புகள் அரசியலமைப்பிற்கு முரணானதும், சட்ட விரோதமுமானதாகும்.

2. மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து ஜனாதிபதி விடுவித்த பிரகடனத்தை ஜனநாயக விரோத செயலாக பார்க்கிறோம். பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக அறிவித்து அவர் பெரும்பான்மையை நிரூபிக்க தாமதம் செய்ய எடுக்கப்பட்ட கால நீடிப்பே இதுவாகும். இதை பயன்படுத்தி மந்திரி பதவிகளையும் பணத்தையும், லஞ்சமாக கொடுத்து எம்.பிக்களை தங்கள் பக்கம் முறைகேடாக இழுத்து பெரும்பான்மை பெற முயற்சிப்பதை கண்டிக்கிறோம்.

3. இந்த காரணங்களுக்காக ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வாக்களிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நடுநிலை வகிப்பது என்பது அராஜகம், வெற்றிபெறுவதற்கு வழிவகுக்கும் ஜனநாயக விரோத செயல் என்பதே எமது நிலைப்பாடு.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube