‘சர்கார்’ படத்துக்கு டிக்கெட் எடுப்பதில் தள்ளுமுள்ளு: ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி

‘சர்கார்’ திரைப்படத்திற்கு டிக்கெட் எடுப்பதில் திரையரங்கில் ரசிகர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதை அடுத்து போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘சர்கார்’ திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. பல்வேறு சர்ச்சைகளில் ஆரம்பம் முதலே சிக்கியுள்ள‘சர்கார்’ திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றில் அதிக தொகைக்கு விற்கப்பட்ட படமாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

படம் ரிலீஸாகுமா என்கிற அளவுக்கு உயர் நீதிமன்றத்தில் போராடி மீண்ட படம் நாளை ரிலீஸ் ஆகிறது. ரஜினிக்கு அடுத்து மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள விஜய்யின் ‘சர்கார்’ படம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் நாளை படம் வெளியாவதை அடுத்து இன்று அதற்கான டிக்கெட் விற்பனை நடந்து வருகிறது. சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் உள்ள திரையரங்கத்தில் டிக்கெட் வாங்க ரசிகர்கள் திரண்டனர். அப்போது அவர்களிடையே மோதல் மூண்டதால் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸார் தடியடி நடத்தி அவர்களைக் கலைத்தனர்.

Google+ Linkedin Youtube