அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை பெருமையாக உடைப்போம்: ஈரான் சவால்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளை பெருமையாக உடைப்போம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு  தொலைக்காட்சியில் ஈரான் அதிபர்  ஹசன் ரவ்ஹானி பேசும்போது, ”அமெரிக்கா பொருளாதாரத் தடையைப் பயன்படுத்தி ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பூஜ்ஜியமாக மாற்ற எண்ணுகிறது. ஆனால் நாங்கள் அமெரிக்காவின் தடையைப் பெருமையாக உடைத்து கச்சா எண்ணெயை தொடர்ந்து ஏற்றுமதி செய்வோம்.

அமெரிக்க வரலாற்றிலேயே வெள்ளை மாளிகையில் நுழைந்த நபர் ஒருவர் சட்டம் மற்றும் சர்வதேசப் பேச்சுவார்த்தைகளை மீறுவார் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த நவம்பர் 2 ஆம் தேதி பொருளாதாரத் தடைகள் காத்திருக்கின்றன என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.  இந்த நிலையில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை நாங்கள் மீறுவோம் என்று ஈரான் வெளிப்படையாக அறிவித்துள்ளது.

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டல் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube