சர்காருக்கு முன்னால ஒரு ரூபா கிடைக்காது: தயாரிப்பாளர் தனஞ்ஜெயன்

சர்காருக்கு முன்னால ஒரு ரூபா கிடைக்காது என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தெரிவித்துள்ளார்.

ராதாமோகன் இயக்கத்தில், ஜோதிகா நடித்துள்ள படம் ‘காற்றின் மொழி’. விதார்த், லட்சுமி மஞ்சு, இளங்கோ குமரவேல் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சிம்பு கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். ‘துமாரி சுலு’ இந்திப் படத்தின் ரீமேக் இது.

 

இந்தப் படம், ஜோதிகாவின் பிறந்த நாளான அக்டோபர் 18-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆயுத பூஜை விடுமுறையான அந்தத் தேதியில் ‘வடசென்னை’ (அக்டோபர் 17) மற்றும் ‘சண்டக்கோழி 2’ ஆகிய படங்கள் ரிலீஸானதால், ‘காற்றின் மொழி’ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில், வருகிற 16-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமா விமர்சகரான ஸ்ரீதர் பிள்ளை, ‘சர்கார்’ படத்துக்கு 10 நாட்கள் பின்னரும், ‘2.0’ படத்துக்கு 13 நாட்களுக்கு முன்னரும் 4 தமிழ்ப் படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. ‘எ சாண்ட்விச் டேட்’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குக் கீழே, ‘என்ன பண்றது சார். இந்தத் தேதியை விட்டா ரெண்டு மாசம் காத்திருக்கணும்’ என்று குறிப்பிட்டிருந்தார் தனஞ்ஜெயன்.

‘காற்றின் மொழி தீபாவளிக்கே கூட வந்திருக்கலாம். 6 ஸ்கிரீனுக்கு ஒன்று கிடைச்சிருந்தால் கூட நல்ல பப்ளிசிட்டி கிடைச்சிருக்கும். எனிவே, உங்களுக்குத் தெரியாத பிசினஸ் மாடலா? காற்றின் மொழிக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்’ என கருணா என்பவர் கூறியிருந்தார்.

அவருக்குப் பதிலளித்த தனஞ்ஜெயன், ‘சர்காருக்கு முன்னால ஒரு ரூபா கிடைக்காது சார். அடுத்த வாரமும் பெரும்பாலான ரசிகர்களின் நினைப்பு ‘சர்கார்’ படத்தைப் பார்ப்பதாகத்தான் இருக்கும். பெரிய ரிஸ்க் சார்’ எனத் தெரிவித்துள்ளார்.

Google+ Linkedin Youtube