1999-க்குப் பிறகு முதல் முறையாக பெல்லாரி தொகுதியை இழந்த பாஜக: கர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ்-மஜத கூட்டணிக்கு வெற்றி

கர்நாடகாவில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 5 தொகுதிகளில் 4 தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றி பெற்றது காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி. மேலும் பெல்லாரி தொகுதியில் 1999-க்குப் பிறகு முதல் முறையாக பாஜக தோல்வி கண்டு பின்னடைவு கண்டது.

2019 லோக்சபா தேர்தல்களில் பாஜகவுக்கு கர்நாடகாவில் சவால் காத்திருப்பதாக காங்கிரஸ், ஜேடிஎஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக பெல்லரி தொகுதியை 1999-க்குப் பிறகு முதல் முறையாக பாஜக கோட்டை விட்டது பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

அதுவும் பெல்லாரியில் நின்ற பாஜக வேட்பாளர், முன்னாள் எம்.பி. ஜே.ஷாந்தா மாவட்டத்தின் அரசியலுக்கு புதிதாக வந்துள்ள காங்கிரஸ் வேட்பாளர் வி.எஸ்.உக்ரப்பாவிடம் 2.4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்துள்ளது பாஜகவைப் பொறுத்தவரை கவலையளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

“இந்த வெற்றி மக்களுக்கானது, மதச்சார்பின்மைக்கானது” என்று உக்ரப்பா வெற்றி குறித்து தெரிவித்தார்.

ஷிமோகா தொகுதியில் பாஜக வெற்றி பெற்றாலும் இடைவெளி குறைந்துள்ளது. இந்தத் தொகுதியில் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் பி.எஸ்.ராகவேந்திரா, மஜதவின் மது பங்காரப்பாவை 52,148 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். 2014-ல் இதே தொகுதியில் எடியூரப்பா 3.63 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது குறிப்பிடத்தக்கது.

மாண்ட்யாவில் பொதுவாக காங்கிரஸ் கட்சிக்கும் மஜதவுக்குமே போட்டியிருக்கும், ஆனால் இம்முறை கூட்டணி என்பதால் அதன் வேட்பாளர் ஷிவராமகவுடா பாஜக வேட்பாளர் சித்தராமையாவைக் காட்டிலும் (இவர் தேர்தலுக்கு சற்று முன் தான் கட்சியில் சேர்ந்தார்) 3.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடந்த தொகுதிகளில் காங்கிரஸ்-மஜத கூட்டணி தங்கள் தொகுதிகளில் வெற்றி பெற்று தக்கவைத்தது.

Google+ Linkedin Youtube