அறையைச் சுத்தம் செய்யச் சொன்னதற்காக ஒரு கொலை: அமெரிக்காவில் 11 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை

அமெரிக்கா, அரிசோனாவைச் சேர்ந்த 11 வயது சிறுவன் தன் 65 வயது பாட்டியைத்  துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பாகியுள்ளது.

அரிசோனா லிட்ச்பீல்ட் பார்க் பகுதியில் நடந்த இந்த அதிர்ச்சி, துயரச் சம்பவத்தில்  அறையைச் சுத்தமாக வைத்துக் கொள் என்று அறிவுரை வழங்கிய 65 வயது பாட்டியை 11 வயது பேரன் சுட்டுக் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான்.

தன் தாத்தாவின் துப்பாக்கியைப் பயன்படுத்தி பாட்டியைக் கொன்ற சம்பவத்தில் தாத்தாவே சாட்சியாக இருந்தார்.

பாட்டி யுவோன் உட்வர்ட் மற்றும் தாத்தா ஆகியோர் பேரனை எப்போதும் அறையைச் சுத்தமாக வைத்துக்கொள்ள அறிவுறுத்தி வந்தனர். நாள் பூராவும் இதைச் சொன்னவுடன் 11 வயது பேரனுக்கு கோபம் வந்தது. அவர்கள் கூறுவதைக் கேட்கக் கூடாது என்று பிடிவாதமாக இருந்துள்ளான்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்ரு பாட்டி உட்வர்ட் இவரது கணவர், அதாவது தாத்தா இருவரும் டிவி பார்க்க அமர்ந்திருந்தனர். மாலை 5 மணியிருக்கும். அப்போது துப்பாக்கியை எடுத்து வந்த சிறுவன் பாட்டியின் பின் தலையில் துப்பாக்கியால் சுட்டான். தாத்தா பேரனைப் பிடிக்கப் பார்க்க அவன் அறையை விட்டு வெளியே ஓடினான். பிறகு துரத்தலை கைவிட்டு எமெர்ஜென்சி எண்ணுக்கு தொலைபேசி செய்தார்.

இவ்வாறு அவர் செய்து கொண்டிருக்கும் போதே மீண்டுமொரு துப்பாக்கிச் சத்தம் கேட்டது, அது 11 வயது பேரனும் தன்னைத்தானே சுட்டுக் கொண்ட சப்தம்தான்.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர், இந்தச் சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Google+ Linkedin Youtube