‘தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு

ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற பிரதமர் மோடி தலைமையிலான அரசு முயற்சித்து வருகிறது. 2019-ம் ஆண்டு தேர்தல் செலவுக்காக ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ. ஒரு லட்சம் கோடியை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறது என்று முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் கொல்கத்தாவில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு மத்திய வங்கியான ரிசர்வ் வங்கியைக் கைப்பற்ற முயற்சிக்கிறது.

அடுத்த ஆண்டில் நடைபெறும் மக்களவைத் தேர்தலுக்கு பாஜகவுக்குச் செலவு செய்ய பணம் தேவை. அதற்காக மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.ஒருலட்சம் கோடியைக் கேட்டுள்ளது. ஆனால், உண்மையில் சூழல் என்னவென்றால், வருமானம் வரும் அனைத்துக் கதவுகளும் அடைக்கப்பட்டுவிட்டதால், இப்போது ரிசர்வ் வங்கிக்கு நெருக்கடி கொடுத்து ஒரு லட்சம் கோடி ரூபாயை கேட்டு மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது.

மத்திய அரசின் இந்த நெருக்கடிக்கு ரிசர்வ் வங்கியின் கவர்னர் உர்ஜித் படேல் மறுத்தால், மத்திய அரசு உச்சபட்ச நடவடிக்கையாக ரிசர்வ் வங்கிச் சட்டம் பிரிவு7-ஐப் பயன்படுத்தி ரிசர்வ் வங்கியைப் பணிய வைக்கும்.

ஆனால், எந்த விஷயத்துக்கும் அச்சப்படாமல் ரிசர்வ் வங்கி கவர்னர் தொடர்ந்து தனது நிலைப்பாட்டில் இருப்பார் என்பது எங்களின் நம்பிக்கை. ஒருவேளை அரசின் உத்தரவுக்குப் பணியாவிட்டால், மத்திய அரசு ரிசர்வ் வங்கிச்சட்டம் பிரிவு7-ஐப் பயன்படுத்தி, ரூ. ஒரு லட்சம் கோடியை அரசின் கஜானாவுக்கு மாற்ற உத்தரவிடும்.

இந்தச் சூழல் ஏற்படும்போது, ரிசர்வ் வங்கி கவர்னருக்கு இரு வாய்ப்புகள் மட்டுமே இருக்கும். ஒன்று அவர் பணத்தை மத்திய அரசுக்கு மாற்ற வேண்டும், அல்லது தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இதில் எது நடக்கும் என்பது வரும் 19-ம் தேதி ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டத்தில் தெரியவரும்.

என்னைப் பொறுத்தவரை ரிசர்வ் வங்கி கவர்னர் எந்த முடிவு எடுத்தாலும், ரிசர்வ் வங்கியின் மதிப்பும், நம்பகத்தன்மையும் சீரமைக்க முடியாத அளவுக்குச் சீர்கெட்டுவிடும். ரிசர்வ் வங்கியைக் கைப்பற்றும் நோக்கில் மத்தியஅரசு முயன்று வருகிறது. நாட்டின் மிக முக்கியமான அரசு நிறுவனம் ஒன்று புகழின் உச்சியில் இருந்து வீழப்போகிறது.

ரிசர்வ் வங்கியின் வாரியக் குழுவில் மத்திய அரசு தனக்குச் சாதகமானவர்களைத் தேர்வு செய்து நியமித்துள்ளது. தனது ஒவ்வொரு விருப்பத்தையும் வாரியக்குழு மூலம் சாதிக்க முயல்கிறது.

பணமதிப்பிழப்பின் விளைவுகள் பேரழிவுக்குரியது. இன்னும் பொறுத்திருந்து பார்க்கலாம், ஏதேனும் பேரழிவு நடவடிக்கை ஏதும் இருக்கிறதா நவம்பர் 19-ம் தேதி பார்க்கலாம்.

இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube