கலிபோர்னியாவில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு: 13 பேர் பலி

கலிபோர்னியாவில் மது விடுதி ஒன்றில் மர்ம நபர்  ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உட்பட 13 பேர் பலியாகினர்.

இதுகுறித்து கலிபோர்னியா போலீஸார் கூறும்போது, ”அமெரிக்காவில்  கலிபோர்னியா மாகாணத்தின் டவுசன் ஒக்ஸ் நகரில் உள்ள பார் ஒன்றில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த மர்ம நபர் உட்பட 13 பேர் பலியாகினர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்தவர்களின் முழுமையான விவரம் இதுவரை தெரியவில்லை. துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 20 பேர் காயமடைந்திருக்கலாம் என்று கருதுகிறோம் ” என்று தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டை  நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறும்போது, ''அந்த நபர் மிக வேகமாக வந்து அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். மேலும் புகை குண்டுகளையும் அப்பகுதியில் வீசி தீ விபத்தை ஏற்படுத்தினார். மது விடுதியின் கதவை உடைத்துக்கொண்டு மக்கள் பலர் வெளியே வந்தனர்'' என்றார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் குறித்தும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் குறித்தும் விசாரணை நடந்து வருவதாகவும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+ Linkedin Youtube