பேட்டிக்கு பெரும் வரவேற்பு: ஜீ தமிழ் குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டிய ரஜினி

ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால், பேட்டி எடுத்த குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார் ரஜினி.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘2.0’. இப்படத்தின் அனைத்து மொழி தொலைக்காட்சி உரிமத்தையும் பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஜீ தொலைக்காட்சி.

இதனால் ஜீ தமிழுக்கு ரஜினி பேட்டியளித்தார். இது தீபாவளி ஸ்பெஷலாக ஒளிபரப்பப்பட்டது. நீண்ட நாட்கள் கழித்து ரஜினி கொடுத்திருக்கும் தனிப் பேட்டி என்பதால், ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் எதிர்நோக்கினார்கள். இதில் ரஜினி அளித்த பதில்கள் மிகவும் எதார்த்தமாக இருந்ததாக திரையுலக பிரபலங்கள், ரஜினி ரசிகர்கள் என சமூக வலைதளத்தில் கொண்டாடி வந்தார்கள்.

ரஜினியைப் பேட்டி கண்டது குறித்து அர்ச்சனா, “எனது வாழ்நாளின் மறக்க முடியாத நாள். ஜீ தமிழ்த் தொலைக்காட்சியில் தலைவருடன் ஒரு நேர்காணல். சூப்பர் ஸ்டார் என்னை அழைத்து நேர்காணல் சிறப்பாக இருந்ததாக வாழ்த்துகிறார். திரையில் அவரது மாயாஜாலத்தால் நட்சத்திரமாக ஜொலிக்கிறார். என்னைப் போன்றோரை அழைத்து வாழ்த்து சொல்லி சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார். மெய் சிலிர்க்கிறது” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும் தொடர்ச்சியாக பலரும் பாராட்டு தெரிவிப்பதால், பேட்டி எடுத்த ஜீ தமிழ் குழுவினரை மட்டும் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்திருக்கிறார் ரஜினி. இந்தச் சந்திப்பு இன்று (நவம்பர் 8) காலை நடைபெற்று இருக்கிறது. இப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Google+ Linkedin Youtube