ஓசோன் ஓட்டை: நம்பிக்கை தரும் மாற்றம்!

ஓசோன் படலத்தில் ஏற்பட்ட பாதிப்பு 2060 வாக்கில் இந்த ஓட்டை முழுமையாக அடைக்கப்பட்டுவிடும் என்கிறது ஐநா நடத்தியிருக்கும் ஆய்வு. வளிமண்டலத்தில் ஆபத்தான வேதிப் பொருட்கள் கலந்ததால், அண்டார்டிகாவுக்கு மேலே, ஓசோன்படலத்தில் ஓட்டை விழுந்தது, 1980-களில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஓட்டையின் வழியே, தோல் புற்றுநோயை ஏற்படுத்தும் புற ஊதாகக் கதிர்கள் பூமியில் ஊடுருவின. இதையடுத்து, இந்த வேதிப் பொருட்கள் உற்பத்திக்குக் கடுமையான தடைகள் விதிக்கப்பட்டன.

 இது தொடர்பாக, 1987-ல் கையெழுத்தான மன்ட்ரியால் நெறிமுறை ஒப்பந்தத்தின்படி இந்தத் தடைகள் அமலுக்கு வந்தன. குறிப்பாக, குளிர்பதனப் பெட்டியில் பயன்படுத்தப்பட்டுவந்த குளோரோபுளோரோ கார்பன்கள் தடைசெய்யப்பட்டு, மாற்றாக ஹைட்ரோபுளோரோ கார்பன் எனும் வேதிப் பொருள் பயன்படுத்தப்பட்டது. இதற்கு நல்ல பலன் கிடைத்திருக்கிறது. ஓசோன் படலத்தில் ஏற்பட்ட ஓட்டை, ஒவ்வொரு பத்தாண்டுக்கும் 1% முதல் 3% வரை சரியாகிவந்திருக்கிறது. ஓசோன் படலம் என்பது, புற ஊதாக் கதிர்களிலிருந்து பூமியைக் காக்கும் படலமாக இருந்துவருகிறது.

இந்தப் புற ஊதாக்கதிர்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்துவதுடன், கண்புரை போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகிறது. வன உயிர்களுக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் ஆபத்தின் மூலத்தைக் கண்டுபிடித்து, அதைத் தடைசெய்தால், மனிதகுலத்தை அழிவிலிருந்து காப்பாற்றலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்!

Google+ Linkedin Youtube