பொருளாதார வளர்ச்சி 7.3% ஆகக் குறையும்: தரச்சான்று நிறுவனம் மூடி'ஸ் கணிப்பு

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு சரிவுஆகிய காரணங்களால் 2019-ல்இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.3 சதவீதமாகக் குறையும் என்று மூடி'ஸ் கணித்துள்ளது. 2020-ம் ஆண்டில் இது 7.4 சதவீதமாக உயரும் என்று குறிப்பிட்டு உள்ளது.

இந்தியாவின் நிதித்துறைசெயல்பாடுகள் கவலையளிப்பதாகவும் இது பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் சவாலாக இருக்கும் என்றும் மூடி'ஸ் எச்சரித்துள்ளது.

2018-ம் ஆண்டின் முற்பாதியில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.9 சதவீதத்தை எட்டியது.

ஆனாலும் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் விளைவாக ஏற்பட்டபாதிப்புகள் முற்றிலுமாக நீங்கவில்லை. இதனால் உள்நாட்டின் நுகர்வு அதிகரிக்கவில்லை, இதனால் முதலீடுகளும் உயரவில்லை என்றும் இதனால் பெருமளவிலான பொருளாதார ஊக்குவிப்புகள் முன்னேற்றமடையவில்லை என்றும் மூடி’ஸ் சுட்டிக் காட்டியுள்ளது.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உயர்வு மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை காரணமாக வீடுகளில் நுகர்வு குறைந்துள்ளது. இதன் காரணமாக மக்களின் செலவழிக்கும் திறன்குறைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேபோல கடனுக்கான வட்டி அளவும் அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை காரணமாக பணப் புழக்கம் குறைந்துள்ளது. 2019-ம் ஆண்டு வரை ரிசர்வ் வங்கி இதே நிலையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் உள்நாட்டு நுகர்வு வரும் ஆண்டும் குறையும் என்று மூடி'ஸ் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் நிதித்துறையைப் பொருத்தமட்டில் மிகப் பெரும் சவாலான சூழல் நிலவுகிறது. வாராக் கடனை மீட்கும் நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி திவால் மசோதாவை பிரயோகப்படுத்தி மீட்க முயல்கிறது.

மேலும் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள 11 வங்கிகளின் நிதி நிலையை மேம்படுத்தும் முயற்சியில் அது இறங்கியுள்ளது. வங்கிகளை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கையானது நீண்ட கால செயல்திட்டமாகும். இதனால் வங்கியல்லாத நிதி நிறுவனங்களில் பணப் புழக்கம் குறைந்து அது பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையை உண்டாக்கும். குறிப்பாக ஐஎல்அண்ட்எப்எஸ் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள மிகப் பெரும்நிதி நெருக்கடியும் இதற்கு ஒரு உதாரணமாகும்.

தொடர் கண்காணிப்பு மூலம் ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கையோடு செபி கட்டுப்பாடு மற்றும் நிதி அமைச்சக மேற்பார்வை மூலம் இது தொடர்ந்து செயல்படுத்தப்பட்டால்தான் கடன் வசூலாகும். குறுகிய காலத்தில் நிதித்துறையை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருந்தாலும் கடன் வழங்கும் அளவு மிகவும் மெதுவான வளர்ச்சியையே எட்டும் என்று மூடி'ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல வங்கியல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎப்சி) கடன் கிடைப்பதில் நிலவும் பாதகமான அம்சங்கள் மேலும் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலையை ஏற்படுத்தும் என்று சுட்டிக் காட்டியுள்ளது.

Google+LinkedinYoutube