360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’ வீசிய சுழற்பந்து வீச்சாளர்; ‘டெட்பால்’ அறிவித்த நடுவர்: கிரிக்கெட் விதி என்ன சொல்கிறது? 360 டிகிரி கோணத்தில் ‘சுழன்று’

கொல்கத்தாவில் நடந்த 23 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் உத்தரப் பிரதேச வீரர் சிவா சிங் 360 கோணத்தில் சுழன்று வித்தியாசமாகப் பந்துவீசியதால், அவரின் பந்துவீச்சை ‘டெட் பால்’ என்று நடுவர் அறிவித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள கல்யாணி பகுதியில் உள்ள பெங்கால் கிரிக்கெட் அரங்கில் 23 வயதுக்குட்பட்டோருக்கான சி.கே. நாயுடு டிராபிக்கான கிரிக்கெட் போட்டி(4 நாட்கள் டெஸ்ட்) நடந்தது. இதில் உத்தரப் பிரதேசம் மற்றும் பெங்கால் அணிகள் மோதின.

இதில் உத்தரப் பிரதேச அணியைச் சேர்ந்த இடதுகை சுழற்பந்துவீச்சாளர் சிவா சிங் வித்தியாசமாகப் பந்துவீசியதுதான் தற்போது விவாதப்பொருளாக மாறி இருக்கிறது. வீரர் சிவா சிங், 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த வீரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்க மறுப்பு

உத்தரப் பிரதேச அணி வீரர் சிவா சிங் பந்துவீசும் போது 360 டிகிரி கோணத்தில் சுழன்று பந்து வீசினார். இதைப் பார்த்த நடுவர் வினோத் சேஷன் அந்தப் பந்துவீச்சை ஏற்க முடியாது எனத் தெரிவித்து அதை ‘டெட்பால்’ என அறிவித்தார். இது உத்தரப் பிரதேச அணியினருக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

50 வினாடிகள் ஓடக்கூடிய இந்த வீடியோவை முன்னாள் வீரரும், சுழற்பந்துவீச்சு ஜாம்பவானான பிஷன் சிங் பேடியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘வித்தியாசமான பந்துவீச்சு’ எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச வீரர் சிவா சிங் வித்தியாசமாகப் பந்துவீசியதும், அதை ‘டெட்பால்’ என அறிவித்த நடுவர் சேஷன் சிறிது நேரம் ஆட்டத்தை நிறுத்தி மற்றொரு நடுவர் ரவி சங்கருடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் பந்துவீச்சாளர் சிவாவிடமும், கேப்டன் சிவம் சவுத்ரியிடமும் வித்தியாசமான முறையில் பந்துவீசக்கூடாது. அவ்வாறு வீசினால், அதை ‘டெட்பால்’ என்று அறிவிப்போம் என்று எச்சரித்தனர்.

தவறு இல்லை

ஆனால் பந்துவீச்சாளர் சிவா கூறுகையில், இதுபோல் பலமுறை பந்துவீசியும் எந்த நடுவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை தற்போது டெட்பால் என்று அறிவித்தது வியப்பாக இருக்கிறது . இதற்கு முன் விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில், 360 டிகிரி கோணத்தில் திரும்பிச் சுழன்று பந்து வீசினேன். அப்போது நடுவர்கள் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

என்னுடைய பந்துவீச்சு எந்தவிதத்திலும் தவறானது அல்ல. பேட்ஸ்மேன்கள் மட்டும் ‘ஸ்விட்ச் ஹிட்’ முறையில் பேட் செய்ய அனுமதிக்கப்படும் போது பந்துவீச்சாளர்கள் பந்து வீச அனுமதிக்கப்படவில்லை. நான் இதற்கு முன் ஒருநாள் போட்டிகள், டி20 போட்டிகளில் இதுபோல் பந்து வீசி இருக்கிறேன். அப்போது யாரும் எதிர்க்கவில்லை. இப்போது ‘டெட் பால்’ என்று நடுவர் அறிவித்தவுடன் ஏன் ‘டெட்பால்’ என்று ஏன் அறிவித்தீர்கள் என்று நடுவரிடம் கேட்டேன். அதற்கு அவர் கிரிக்கெட் விதியில் அதுபோல் பந்து வீசுவது அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.

 

கிரிக்கெட் விதி

இதுகுறித்து மூத்த, முன்னாள் நடுவரான சைமன் டாபுல் கூறுகையில், ''கிரிக்கெட்டில் பேட்ஸ்மேனுக்கு மட்டுமே ஸ்விட்ச் ஹிட் அடிக்க அனுமதி உண்டு. ஆனால், பந்துவீச்சாளர் 360 டிகிரி கோணத்தில் சுழன்று ஒவ்வொரு பந்தையும் வித்தியாசமாக வீச அனுமதியில்லை. அந்த வகையில், சிவாவின் பந்துவீச்சு என்பது தவறானது கிரிக்கெட் விதிகளுக்கு மாறானது.

கிரிக்கெட் விதி 20.4.2.1 ன்படி பேட்ஸ்மேனை ஏமாற்றும் வகையில் பந்து வீசுவது நியாயமற்றது. பேட்ஸ்மேனை ஏமாற்றும் வகையில் பந்துவீச்சாளர் பந்து வீசும் போது, பந்துவீச்சாளரிடம் நடுவர் கேள்வி எழுப்பி மீண்டும் அதுபோல் நடக்காமல் எச்சரிக்கலாம். அந்தப் பந்துவீச்சை டெட்பால் என்று அறிவிக்கலாம். இது வேண்டுமென்றே செய்யப்பட்டது என நடுவர் நினைத்தால், பந்துவீச்சாளர்களுக்கு அபராதமாக 5 ரன்கள் விதிக்கலாம்'' எனத் தெரிவித்தார்.

இதன் மூலம் ஒரு பந்துவீச்சாளர் முன் அறிவிப்பின்றி, நடுவரின் அனுமதியின்றி வித்தியாசமாகப் பந்து வீசுவது அதாவது, ஒரே ஓவரில் ஒரு பந்துவீச்சாளர் வலது கையிலும், இடது கையிலும் மாறி மாறி பந்து வீசுவது தவறாகும் என்பது தெளிவாகிறது.

இந்தப் போட்டியில் பெங்கால் அணியை வீழ்த்தியது உத்தரப் பிரதேச அணி. சர்ச்சைக்குரிய வகையில் பந்து வீசிய சிவா, 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Google+ Linkedin Youtube