’எப்படி இருந்த பிரசாந்த்...’- ரசிகர்களின் இன்பமும், அதிர்ச்சியும்!

ராம் சரண், கியாரா அத்வானி நடித்த ‘வினய விதய ராமா’ தெலுங்குப் படத்தின் டீஸர் இன்று இணையத்தில் வெளியானது. இப்படத்தை பொயாபதி சீனு இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் டீஸரைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி. படத்தில் நடிகர் பிரசாந்த் நடித்துள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் டீஸரில் இரண்டு இடத்தில் வருகின்றன. அதில் ஒரு காட்சியில் ராம் சரணுக்கு பின்னால் நடந்து வரும் நான்கு பேரில் ஒருவராக பிரசாந்த் வருகிறார்.

இதைப் பார்த்த பிரசாந்த் ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளை வருத்தத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.

நடிகர் பிரசாந்த் ’வைகாசி பொறந்தாச்சு’ படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அன்று தொடங்கி  இன்று வரை பல வெற்றிப் படங்களில் நடித்த பிரசாந்த் தமிழில் இதுவரை ஹீரோவாக மட்டுமே நடித்துள்ளார். தற்போது அவர் நடிப்பில் வெளிவரவுள்ள ’ஜானி’ படத்தின் டீஸர் யூ-ட்யூபில் வெளியாகி 10 லட்சம் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

ஆனால் பிரசாந்த ஒரு தெலுங்குப் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருப்பதால் அவரது ரசிகர்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் அதிருப்தியைத் தெரிவித்து வருகின்றனர்.

Google+ Linkedin Youtube