ஈரான், ஈராக் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 500-க்கும் மேற்பட்டோர் காயம்

ஈரான், ஈராக் எல்லையில் இன்று 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தப் பூகம்பம், தலைநகர் பாக்தாத் வரையிலும், ஈராக்கின் பல மாநிலங்களிலும் உணரப்பட்டது.

ஈரான் எல்லையான குவாஷிர் ஷீரின் பகுதியை மையமாகக் கொண்டும், ஈராக் எல்லை நகரான கானாகினிலிருந்து 30 கி.மீ தொலைவிலும் இந்தப் பூகம்பம் மையம் கொண்டு இருந்தது. பூமியில் இருந்து 10கி.மீ ஆழத்தில் இந்தப் பூகம்பம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.3 ஆக பூகம்பம் பதிவானது என்று அமெரிக்க பூகோளவியல் அமைப்பும், ஈராக் பூகோளவியல் அமைப்பும் தெரிவித்தன.

இந்த பூகம்பத்தின் அதிர்வு தலைநகர் பாக்தாத் வரையிலும், ஈராக்கின் பல மாநிலங்களிலும் உணரப்பட்டது. குறிப்பாக ஈரானின் சர்போல் இ ஜஹாப் மாவட்டத்தின் பெரும்பகுதியான கிராமங்களில் உள்ள வீடுகள் சேதமடைந்தன.

பூகம்பம் ஏற்பட்டபுடன் கட்டிடங்கள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே வந்தனர். இருந்தபோதிலும், இந்தப் பூகத்தில் வீடுகள், கடைகள் இடிந்து விழுந்ததில், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

மீண்டும் பூகம்பம் ஏற்படலாம் என்ற அச்சத்தில் மக்கள் வீடுகளுக்குள் செல்லாமல் சாலைகளிலும், தெருக்களிலும் தஞ்சமடைந்துள்ளனர்.

பாக்நாத் நகரில் உள்ள மக்களும் பூகம்பத்தின் அதிர்வுகளை ஒரு நிமிடம் வரைஉணர்ந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், ஈராக்கின் பல மாநிலங்களிலும் இந்த நில அதிர்வு இருந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பூகம்பத்தில் படுகாயமடைந்த 33 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால், உயிரிழப்புகள் குறித்து எந்தத் தகவலும் இல்லை.

பூகம்பம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பேரிடர் மீட்புக்குழுவினர், ராணுவத்தினர், போலீஸார், மீட்டுப்புப்படையினர் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து, மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பூகம்பத்தால், ஈரான், ஈராக் எல்லைப்பகுதி சாலைகள், எல்லை ஓரம் இருக்கம் நகரங்கள், கிராமங்கள், வீடுகள், போன்றவை கடுமையாக சேதமடைந்துள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு இதேப்போன்று ரிக்டர் அளவில் 7.3 ஆக நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் 700-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube