‘எனக்கா ரெட் கார்டு... எடுத்துப் பாரு என் ரெக்கார்டு’: சிம்பு மறைமுக பதிலடி

தயாரிப்பாளர் சங்கத்தின் கெடுபிடிகளுக்கு, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பாடல் வரிகள் மூலமாக பதிலடி கொடுத்திருக்கிறார் சிம்பு

சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. ரம்யா கிருஷ்ணன், மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீஸர் நவம்பர் 29-ம் தேதி வெளியாகவுள்ளது.

லைகா நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படம் எவ்வித பிரச்சினையின்றி வெளியாக வேண்டுமென்றால், சிம்பு முதலில் விநியோகஸ்தர்கள் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்று படக்குழுவினருக்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சிம்பு ரசிகர்கள் கோபமாக வீடியோ வெளியிட்டு வந்தார்கள். சிம்பு தரப்பிலிருந்து வெளியிடப்பட்ட அறிக்கையில், “ரசிகர்கள் செய்தது தவறு. அதற்கு மன்னிப்புக் கோருகிறேன். அதே வேளையில் எவ்வித பிரச்சினையுமின்றி பொங்கலுக்கு படம் வெளியாகும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படப்பிடிப்பு தளத்திலிருந்து மஹத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ்வில் வந்தார். அப்போது சிம்பு மற்றும் சுந்தர்.சி உள்ளிட்டோர் அதில் பேசியுள்ளார்கள்.

இதில் ரசிகர்கள் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பாடல்கள் குறித்து என்று சிம்புவிடம் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு சிம்பு “பாடல் என்பதால் ஒரு சூப்பர் விஷயம் சொல்கிறேன்.எனக்கா ரெட் கார்டு... எடுத்துப் பாரு என் ரெக்கார்டு’ என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகும். இப்பாடலை நான் எழுதவில்லை. இசையமைப்பாளர் ஆதி எழுதியிருக்கிறார். அவர் ரொம்ப மோசமான பையன். ஆனால், சூப்பராக மியூசிக் பண்ணியிருக்கார். பாடல்களை ரசிகர்கள் கொண்டாடுவார்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.

எனக்கா ரெட் கார்டு என்ற வரிகள் தயாரிப்பாளர் சங்கத்தை கிண்டல் செய்வது போன்ற தொனியில் இருப்பதால், நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும், சிம்பு ரசிகர்கள் இது சரியான பதிலடி என்று தெரிவித்து வருகிறார்கள்.

Google+ Linkedin Youtube