வாக்குகளை பெற பொய் சொல்வதா? - பிரதமர் மோடிக்கு சந்திரசேகர் ராவ் பதிலடி

வாக்குகளை பெற்று தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பிரதமர் மோடி பிரசாரத்தில் பொய்களை கூறி வருவதாக தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளார்.

தெலங்கானாவில் உள்ள 119 தொகுதிகளுக்கும் வரும் டிசம்பர் 7-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் முதல் முறையாகப் பிரதமர் மோடி இன்று கலந்து கொண்டார்.

நிஜாமாபாத்திதல் இன்று நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி காங்கிரஸ், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி(டிஆர்எஸ்) கட்சிகளைக் கடுமையாக சாடினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘காங்கிரஸ் கட்சியும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியும் குடும்ப ஆட்சி நடத்தும் கட்சிகள். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளும் நட்புரீதியாக போட்டியிடுகின்றன. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவும், தெலங்கானாவுக்கும், மக்களுக்கும் ஒன்றும் செய்யவில்லை’’ என பேசினார்.

இதைத்தொடர்ந்து, மெஹபூப்நகர் பகுதியில் இன்று நடைபெற்ற தெலங்கானா ராஷ்டரிய சமிதி பிரசாரக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பேசியதாவது:

தெலங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு 24 மணிநேரமும் மின்சாரம் அளிக்கப்படுகிறது. பாஜக ஆட்சி நடக்கும் எந்த மாநிலத்திலாவது 24 மணிநேர மின்சாரம் வழங்கப்படுகிறதா. ஆனால், தெலங்கானாவில் மின்சாரம் பற்றாக்குறை என்பதே இல்லை. ஆனால், பிரதமர் மோடி, தெலங்கானாவில் மின்சாரம் இல்லை என்று கூறுகிறார்.

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவைப்போல் நான் யாருக்கும் பயந்தவனல்ல. ஒரு மாநில முதல்வருக்கு எதிராக தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தக்கூடாது. தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக உயர்ந்த பதவியில் இருக்கும் நீங்கள் பொய் சொல்லக்கூடாது’’ எனக் பேசினார்.

Google+ Linkedin Youtube