ராமேஸ்வரம் கோயிலில் மகள் திருமண அழைப்பிதழுடன் முகேஷ் அம்பானி வழிபாடு

தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில்  குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை வழிபட்டார்.

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி. இவரது மகள் இஷா அம்பானியும்,  பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரேமோல் ரியாலிட்டி நிறுவனத்தின் நிறுவனர் அஜய் பிராமலின் மகனான ஆனந்த் பிரமோலும்  காதலித்து வந்தார்.

இவர்கள் இருவருக்கும் கடந்த மே மாதம் இத்தாலியில் உள்ள லேக் கோமோவில் உள்ள நட்சத்திர விடுதியில் மிகப் பிரம்மாண்டமான முறையில் 50க்கும் மேலான வகை சாப்பாடு, மூன்று நாள் கொண்டாட்டம் என நடைபெற்ற  நிச்சயதார்த்த விழாவில் பிரபலங்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிச்சயதார்த்த விழாவில் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், அம்பானி மகளின் திருமண அழைப்பிதழை இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களில் வைத்து அம்பானி குடும்பத்தினர் நேரில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.  தங்கத்தினாலே அலங்கரிக்கப்பட்ட ஒரு அழைப்பிதழின் செலவு மட்டுமே ஒரு லட்சத்திற்கும் மேல் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் முக்கிய திருக்கோயிலான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி தொழிலதிபர் முகேஷ் அம்பானி தனது மகளின் திருமண அழைப்பிதழை வைத்து வழிபாடு செய்வதற்காக மும்பையிலிருந்து இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு முகேஷ் அம்பானி  செவ்வாய்க்கிழமை காலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

மதுரையிலிருந்து மண்டபம் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இறங்கி, அங்கிருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலுக்கு பகல் 1.15 மணியளவில் வந்தடைந்தார். அவருக்கு திருக்கோயில் சார்பாக பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் வரும் டிசம்பர் மாதம் 12-ம் தேதி மும்பையில் நடைபெறவுள்ள மூத்த மகள் இஷாவின் திருமண விழா அழைபிதழை ராமநாதசுவாமி மற்றும் அம்பாள் சன்னிதானத்தில் வைத்து சிறப்பு பூஜை நடத்தினார். முகேஷ் அம்பானிக்கு ராமேஸ்வரம் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்தப் பிரசாதம் வழங்கி வேத பண்டிதர்கள் மூலமாக வேத ஆசிர்வாதம் செய்து வைத்தனர்.

தொடர்ந்து ராமநாதசுவாமி கோயிலின் இரண்டாம் பிரகாரத்தின் மராமத்துப் பணிகளின் முழுச் செலவினையும் தாம் ஏற்றுக் கொள்வதாக முகேஷ் அம்பானி ராமேசுவரம் கோயில் நிர்வாகிகளிடம் உறுதி அளித்தார்.

முன்னதாக, தினந்தோறும் பகல் 1 மணிக்கு சாத்தப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலின் நடை முகேஷ் அம்பானியின் வருகைக்காக  கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைக்கப்பட்டது பக்தர்களுக்கிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.    

Google+ Linkedin Youtube