சீனாவில் கார் தயாரிக்கும் முடிவு: ஜெனரல் மோட்டார்ஸூக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

சீனாவில் கார் தயாரிக்கும் திட்டத்தை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் கைவிடாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்காவில் இயங்கும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் கார் தொழிற்சாலைகள் உள்ளன. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நிறுவனத்தின் கார்கள் அதிகமாக விற்பனையாகி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாகவே வர்த்தகத்தை விரிவாக்கும் நடவடிக்கையை ஜெனரல் மோட்டார்ஸ் மேற்கொண்டு வருகிறது.

இதன் தலைமை செயல் அதிகாரியாக மேரி பாரா பதவி வகித்து வருகிறார். இந்தநிலையில், செலவுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைளை மேற்கொள்ள உள்ளதாக மேரி பாரா அறிவித்துள்ளார். அதன்படி, அதிக சம்பளம் வாங்கும் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வதன் மூலம் செலவை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி அமெரிக்கா, கனடா உட்பட முக்கிய நாடுகளில் 14 ஆயிரத்து 800 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்படுவார்கள் என ஜெனரல் மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் ‘ஒயிட் காலர்ஸ்’ செய்யும் ஊழியர்கள் ஆவர்.

இதுமட்டுமின்றி செலவை குறைக்கும் விதமாக சீனாவில் கார்களை தயாரிப்பது குறித்தும் அந்த நிறுவனம் பரிசீலித்து வருகிறது.   இதன் மூலம் 2020-ம் ஆண்டுக்குள் 35 ஆயிம் கோடி ரூபாயை சேமிக்க முடியும் என ஜெனரல் மோட்டர்ஸ் மதிப்பிட்டுள்ளது.இதற்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் கூறுகையில் ‘‘அமெரிக்காவில் உள்ள சில தொழிற்சாலைகளை மூட ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது வேதனையை தரும். இதனால் அமெரிக்க தொழிலாளர்கள் பாதிக்கப்படுவர். இந்த முடிவை ஜெனரல் மோட்டார்ஸ் கைவிட வேண்டும். செலவை காரணம் காட்டி சீனாவில் கார்களை தயாரிக்க ஜெனரல் மோட்டார்ஸ் முடிவு செய்வதை ஏற்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத்தை பாதிக்கும் இந்த முடிவை அந்த நிறுவனம் கைவிட வேண்டும். இல்லையெனில் விளைவுகளை சந்திக்க நேரிடும்’’ எனக் கூறியுள்ளார்.

Google+ Linkedin Youtube