தமிழ்த் திரையுலகிற்கு '2.0' முக்கியமான படம்: ஏன்? - ஒர் அலசல்

நவம்பர் 29-ம் தேதி தமிழ்த் திரையுலகிற்கு மிக முக்கியமான நாள். ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் ‘2.0’ வெளியாகவுள்ளது. கண்டிப்பாக உலக அரங்கில் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தும் என்பதில் சந்தேகமே  இல்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.

* இந்தியத் திரையுலகிலேயே முதன் முறையாக 3டி கேமராவில் முழுப்படமும் ஷூட் செய்திருக்கிறார்கள். இது சாதாரணமான விஷயமே அல்ல. காட்சிகள் சரியாக வந்திருக்கிறதா என்பது தொடங்கி, எடிட்டிங் வரை அனைத்தையுமே 3டி கண்ணாடி அணிந்துதான் பார்க்க வேண்டும். கிராபிக்ஸ் காட்சிகள் முதற்கொண்டு 3டி-க்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

* உலகளவில் ஹாலிவுட் படங்கள் வெளியாகும்போது ஐ-மேக்ஸ் திரையரங்குகளோடு ஒப்பந்தம் செய்யப்பட்டு வெளியாகும். அவ்வாறு ‘2.0’ படமும் ஐ-மேக்ஸ் திரையரங்குகளில் ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்தவுடன் தான் நவம்பர் 29-ம் தேதி வெளியீடு என்று அறிவித்திருக்கிறார்கள். இதன் மூலம் உலக அரங்கில் தமிழ் சினிமாவின் பார்வை என்பது பெரியளவில் உயரும்

* உலகத்தில் முதன்முறையாக 4டி சவுண்ட் தொழில்நுட்பத்தில் இப்படத்தின் ஒலியமைப்பை உருவாக்கியிருக்கிறார் ரசூல் பூக்குட்டி. “திரையரங்குகளில் லெஃப்ட், ரைட், சென்டர் சைட் மேலே ஸ்பீக்கர் பார்த்திருப்பீர்கள். ஆனால் காலுக்கு அடியில் ஸ்பீக்கர் இருப்பது இதுதான் முதன்முறை. தரையில் நடக்கும் காட்சிகளுக்கு ஒலி சேர்த்திருக்கிறோம்” என்று 4டி தொழில்நுட்பம் குறித்து விளக்கமளித்திருக்கிறார் ஷங்கர். இப்படத்துக்காக தமிழகத்தில் சில திரையரங்குகளில் 4டி தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு

* இந்தியளவில் அதிகப்படியான முதலீடுகளைக் கொண்ட படம் ‘2.0’. இதனால் பலரும் இப்படத்தின் வசூல் நிலவரம் எப்படியிருக்கும் என்று எதிர்நோக்கியுள்ளனர். இது நல்லபடியாக அமையும் பட்சத்தில் தொடர்ச்சியாக இதுபோன்ற கதைக்களங்கள் கொண்ட படங்கள் வரும்.

* உலகளவில் இந்தியப் படங்கள் என்றாலே இந்திப் படங்கள் என்ற நிலையை மாற்றியது ’பாகுபலி’. வசூலிலும் அனைத்து இந்திப் படங்களையும் பின்னுக்குத் தள்ளியது. தற்போது தமிழ்ப் படங்களில் உலகளவில் அதிகப்படியான திரையரங்குகளில் ‘2.0’ படத்தை வெளியிட லைகா நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இப்படம் பல இடங்களில் ‘பாகுபலி’யின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிச் செய்தால் தமிழ் சினிமாவின் பக்கம் உலகப் பார்வை திரும்பும்.

* இந்தியாவில் முதல்முறையாக கிராபிக்ஸ் காட்சிகளுக்கு மட்டுமே சுமார் 500 கோடிக்கும் அதிகமாக செலவு செய்திருக்கிறார்கள். இப்படம் வெற்றியடைந்தால் தொடர்ச்சியாக கிராபிக்ஸை மையப்படுத்திய படங்கள் தமிழ் சினிமாவில் வரலாம். தயாரிப்பாளர்களும் கிராபிக்ஸில் அதிகப்படியான முதலீடு செய்ய முன்வருவார்கள்.

* தமிழ்நாட்டில் 200 திரையரங்கு உரிமையாளர்களுக்கும் மேல், இப்படத்துக்காக தங்களுடைய திரையரங்கை 3டி திரையரங்கமாக மாற்றியமைத்திருக்கிறார்கள். ஒரு படத்தின் எதிர்பார்ப்பை முன்வைத்து இப்படி மாற்றுவது என்பது மற்ற படங்களுக்கு நடக்குமா என்றால் இல்லை. காரணம், ஷங்கர் - ரஜினி கூட்டணி தான்.

* தெலுங்கு சினிமாவை எப்படி ‘பாகுபலி’ என்ற படம் உலக அரங்கிற்கு காட்டியதோ, அதேபோன்று ‘2.0’ திரைப்படம் தமிழ் சினிமாவைக் காட்டும். ‘எந்திரன்’ வெளியானபோதே இது நடந்தது என்றாலும், 3டி ஒளிப்பதிவு, 4டி ஒலியமைப்பு போன்ற தொழில்நுட்ப விஷயங்களில் ‘2.0’ கண்டிப்பாக ஆச்சர்யப்படுத்தும்.

* இந்தியத் திரையுலகில் பிரமாண்டமான சயின்ஸ் பிக்சன் படங்கள் வெற்றி என்றால் ‘எந்திரன்’ மட்டுமே. ‘ரா ஒன்’ இந்திப் படம் தோல்வியைச் சந்தித்தது. இதனால் ‘2.0’ படமும் வெற்றி பெற்றால் இன்னும் உலக அரங்கில் தமிழ் சினிமாவின் மதிப்பு என்பது பலமடங்கு உயரும்.

* சயின்ஸ் பிக்சன் படங்கள் என்பதைத் தாண்டி தமிழ் சினிமாவின் சூப்பர் ஹீரோவாக ‘எந்திரன்’ படத்தின் சிட்டி கதாபாத்திரம் அமைந்திருக்கிறது. இந்தியளவில் ஹிட்டும் ஆகியிருப்பதால், ’2.0’ ஹிட்டாகிவிட்டால் தொடர்ச்சியாக இந்த சிட்டி கதாபாத்திரத்தை வைத்து படங்கள் வரும்.

* கமர்ஷியல் படங்கள் என்றால் இந்தியாவில் மட்டுமே கொண்டாடப்படும். ஆனால், சயின்ஸ் பிக்சன் எனும்போது உலகளவில் எந்த மக்கள் வேண்டுமானாலும் பார்த்து புரிந்து கொள்ள முடியும்.

* ஹாலிவுட்டில் மார்வல் ஸ்டுடியோஸ் தொடர்ச்சியாக ஒரு சூப்பர் ஹீரோவை வைத்துப் படங்கள் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அப்படித்தான் ஷங்கர் சிட்டி கதாபாத்திரத்தை தற்போது இப்படத்தில் முன்னெடுத்திருக்கிறார். இதுவும் வெற்றி என்றால் தொடர்ச்சியாக படங்கள் வர வாய்ப்புமுண்டு.

இதில் புதிதாக எமி ஜாக்சன் கதாபாத்திரத்தை சேர்த்திருக்கிறார். அதுவும் சூப்பர் ஹீரோவாக இருந்தால், அடுத்த பாகத்தில் இன்னுமொரு சூப்பர் ஹீரோவைச் சேர்த்தால் இன்னும் பட்டையைக் கிளப்பும்.

Google+ Linkedin Youtube