‘‘இந்தியா வர முடியாது; வந்தால் அடித்துக்கொன்று விடுவார்கள்’’ - நீரவ் மோடி அச்சம்

இந்தியா வந்தால் அடித்துக்கொன்று விடுவார்கள், உயிருக்கு ஆபத்து இருப்பதால் வர முடியாத சூழல் நிலவுகிறது என நீதிமன்றத்தில் நீரவ் மோடியின் சார்பில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

மும்பை வைர வியாபாரி நீரவ் மோடி, அவரது நெருங்கிய உறவினர் மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கி மூலம் ரூ.13 ஆயிரம் கோடி சட்ட விரோத பண பரிமாற்ற மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நீரவ் மோடிக்கு சொந்தமான 3000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி உள்ளது. அவரது பாஸ்போர்ட்டுகளும் முடக்கப்பட்டன.

ஆனால், இந்த மோசடி வெளியுலகுக்கு தெரிய வருவதற்கு முன்பாகவே வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்ட நீரவ் மோடி, வெவ்வேறு பாஸ்போர்ட்டுகளை பயன்படுத்தி பல நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார். இதைத்தொடர்ந்து, நீரவ் மோடிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் விடப்பட்டுள்ளது. மேலும் உலகம் முழுவதும் உள்ள அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு அவரை இந்தியா கொண்டு வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நீரவ் மோடி மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் அமலாக்கத்துறை ஆஜரான வழக்கறிஞர் நேரில் ஆஜராக வரும்படி நீரவ் மோடிக்கு கடிதம் மற்றும் இமெயில் மூலம் அழைப்பு அனுப்பட்டும் அவர் அதனை ஏற்கவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  நீரவ் மோடி அனுப்பிய கடிதத்தை அவரது சார்பில் வழக்கறிஞர் விஜய் அகர்வால் நீதிமன்றத்தில் சமர்பித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை செய்ததாக என் மீது கூறப்படும் புகாருக்கு இதுவரை உரிய ஆதாரங்களை அமலாக்கத்துறை திரட்டவில்லை. நேரில் ஆஜராகுமாறு இமெயில் மூலம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அனுப்பிய கேள்விகளுக்கு விளக்கம் மட்டுமே அளிக்ககூடிய சூழல் உள்ளது.

 விசாரணை அமைப்புகள் விரும்பியபடி இந்தியா வந்து நேரில் விசாரணைக்கு ஆஜராக முடியாத சூழல் உள்ளது. என்னை பற்றி தவறான முறையில் சித்தரிக்கப்படுகிறது. இதனால் எனது உருவ பொம்மைகள் எரிக்கப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. ஏற்கெனவே இந்தியாவில் உணர்ச்சி வசப்பட்டு மக்கள் அடித்துக் கொல்லும் சம்பவங்கள் நடக்கின்றன. எனவே இதுபோன்ற நிகழ்வு எனக்கு நேரலாம். பாதுகாப்பு காரணங்களுக்காவே நேரில் வர தயக்கம் உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google+LinkedinYoutube