சென்னையில் மழை பற்றாக்குறை எவ்வளவு; இனிமேல் பெய்ய வாய்ப்பு உண்டா?

சென்னையை பொறுத்தவரையில் வடகிழக்கு பருவமழை சீசனில் தற்போது வரை மழையளவு பற்றாக்குறையாக இருப்பதால் அடுத்து மழை பெய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கூறியதாவது:

சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இதுவரை சரியாக பெய்யவில்லையே என்ற ஏக்கம் பரவலாக இருந்து வருகிறது. குறிப்பாக சென்னை பகுதியில் தொடர்ந்து பனிப்பொழிவு அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு மழைக்கு வாய்ப்பில்லையோ என்ற எண்ணம் உள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அரசு வைத்துள்ள மழைமானியில், அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ம் தேதி வரையில் பதிவான கணக்குபடி சென்னையில் 634.3 மில்லி மீட்டர் அளவு மழை பெய்து இருக்க வேண்டும். ஆனால் 321.1 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டும் தான் மழை பெய்துள்ளது. அதாவது  49 சதவீதம் அளவுக்கு குறைவாக மழை பெய்துள்ளது.

இதுபோலவே சென்னையை சுற்றியுள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் நிலைமையும் இதுதான். காஞ்சிபுரத்தில் 26 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. அதுபோலவே திருவள்ளூர் மாவட்டத்தில் 38 சதவீதம் குறைவான மழை பெய்துள்ளது. மழையளவு பற்றாக்குறையாக இருப்பதால் இந்த சீசனில் மழை பெய்யாமல் போகுமோ என்ற அச்சம் பரவலாக உள்ளது.

ஆனால் அவ்வாறு அச்சப்படத் தேவையில்லை. சென்னை மட்டுமின்றி வட தமிழக பகுதிகளை பொறுத்தவரை இந்த சீசனில் பிற்பகுதியில் தான் கூடுதல் மழை உள்ளது. அதன்படி டிசம்பர் 4-ம் தேதி உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் ஒரளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதன் பிறகு டிசம்பர் 13-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரையிலும் மழை பெய்வதற்கான அமைப்பு சென்னை கடல்பகுதியில் உள்ளது. 19-ம் தேதி 24-ம் தேதி வரை வட தமிழகத்துக்கு நல்ல மழையை கொடுக்கும்.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு பிறகு டிசம்பர் 28 மற்றும் 29-ம் தேதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது. இது பாக் ஜலசந்தியை நோக்கி நெருங்கி வரும் என்பதால் தமிழகம் முழுவதுமே கனமழை பெய்யும். இதுமட்டுமின்றி ஜனவரி 7 மற்றும் 13-ம் தேதியும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே இந்த ஆண்டு சென்னை உள்ளிட்ட வடதமிழகத்துக்கும் சராசரி மழை பெய்ய வாய்ப்புள்ளது. அப்போது தற்போதுள்ள பற்றாக்குறை தீரும். சென்னையை பொறுத்தவரையில் இந்த வடகிழக்கு பருவமழை சீசனில் சராசரியை விடவும் 10 சதவீதம் அளவுக்கு கூடுதலாக மழை பெய்யவே வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.   

Google+ Linkedin Youtube