ஜி 20 மாநாடு: சர்ச்சையில் சிக்கிய பிரான்ஸ் அதிபர் - சவுதி இளவரசர் சந்திப்பு

அர்ஜெண்டினாவில் நடைபெற்ற ஜி 20 உலகத் தலைவர்கள் மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மக்ரோனும், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானும் சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சவுதி அரேபியா, மெக்ஸிகோ, ஜப்பான், இத்தாலி, இந்தோனேசியா, இந்தியா, பிரான்ஸ், சீனா, கனடா, பிரேசில், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் ஜி 20 அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

அர்ஜெண்டினாவில் இந்த ஆண்டு நடந்த ஜி 20 மாநாட்டில் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரது சந்திப்பு குறித்த ஆடியோவை பிரபல ஆங்கில ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

அதில் ஏமன் போர் மற்றும் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கொலை தொடர்பாக உலக நாடுகளிடையே சவுதியின் செல்வாக்கு பாதிக்கப்பட்டிருப்பது குறித்து இருவரும் பேசியதாகவும் அதில் சவுதி எப்போதும் பிரான்ஸின் பேச்சைக் கேட்டதில்லை என்று மக்ரோன் குறிப்பிட்டதாகவும், அதற்கு  இல்லை அவ்வாறு இல்லை என்று, நான் இதனைப் பார்த்துக் கொள்கிறேன் என்று சவுதி இளவரசர் கூறியதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மக்ரோன் மற்றும் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் இந்தச் சந்திப்பு 5 நிமிடங்கள் நடந்ததாகக் கூறப்படுகிறது.

ஜி 20 மாநாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் சவுதி மறைமுகமாக நடத்தி வரும் போர் குறித்தும், உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பிரபல பத்திரிகையாளர் ஜமாலின் கொலை குறித்தும் உலகத் தலைவர்கள் எவரும் ஏன் விமர்சிக்கவில்லை என்ற கேள்வியை மனித உரிமை ஆர்வலர்கள் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

Google+LinkedinYoutube