‘2.0’ படத்துக்கு ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம்? சிறார் எழுத்தாளர் விழியன்

ரஜினி நடிப்பில் கடந்த நவம்பர் 29-ம் தேதி ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படம், ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாகும். ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்க, வில்லனாக அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தைப் பார்த்த பெரும்பாலானவர்கள் பாராட்டி வருகிறார்கள். தொழில்நுட்பத்தில் மிகச்சிறந்த தமிழ்ப்படமாக இது இருக்கிறது என ஆச்சரியப்படுகின்றனர். அதேசமயம் படத்தின் திரைக்கதை குறித்து எதிர்மறையான விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, இது குழந்தைகள் பார்த்து ரசிக்கக்கூடிய படம் என்றும் கூறப்பட்டு வருகிறது. ஆனால், ஏன் குழந்தைகளை அழைத்துச் செல்லக்கூடாது என்பதற்கான காரணங்களைத் தன்னுடய முகநூலில் பட்டியலிட்டுள்ளார் சிறார் எழுத்தாளர் விழியன்.

“2.0 ஒரு விஷுவல் ட்ரீட். அதில் துளி சந்தேகமும் வேண்டாம். பெயர் போடுவதில் ஆரம்பித்து, சுபம் கார்ட் போடுவதுவரை கண்ணிற்கு விருந்து, மிரட்டல். முதல்நாள் வந்த பல ரிவ்யூக்களில், ‘இது குழந்தைகளுக்கான படம். அவர்களை அழைத்துச் செல்லுங்கள்’ எனக் குறிப்பிட்டு இருந்தார்கள். அது எவ்வளவு சர்காஸ்டிக் என்பது படம் பார்த்த பின்னரே புரிந்தது. ஏன் குழந்தைகளை அழைத்துச்செல்ல வேண்டாம்? என நிறைய காரணங்களை அடுக்கலாம்.

அடிப்படையான ஒன்று அறம். பக்‌ஷிராஜன் பறவைகளுக்காகப் போராடுகின்றார். அவர் தரப்பில் ஒரு துளிகூட அநியாயம் இருப்பதாகப் படத்தில்கூட காட்டவில்லை. இறந்தபிறகு அந்த பவித்ரமான ஆத்மா எப்படிக் கொடூரமான ஆத்மாவாக மாறுகின்றது. ஆரா (aura) கூற்றுப்படியும் இது எப்படி +ve பெரும் -veவாக மாறுகின்றது. முரணாக, பறவைகள் மீது அன்புகொண்டு இறுதிக் காட்சிகளில் பக்‌ஷிராஜன் தடுமாறுகின்றார். அப்படியெனில், ஒவ்வொரு குடிமகனையும் ஏன் கொடூரமாகச் சிதைக்க வேண்டும்? இறுதிக்காட்சியில் வசீகரன் மொபைல் போன் பற்றிப் பேசுவதைக் கேட்க திரையரங்கத்தில் யாருமே இல்லை. சிட்டி, பக்‌ஷிராஜனை அழித்ததுமே படம் முடிந்துவிடுகின்றது. அதன் பிறகு சொல்லப்படுவதை யாரும் காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை.

குழந்தைகளுக்கு என்ன புரியும்? செழியனிடம், பக்‌ஷிராஜன் யார்? என்று கேட்டேன். ‘அவர் ஒரு பேய்’ என்றான். நியாயத்திற்காகப் போராடினால் உனக்குக் கிடைப்பது இதுவே என்று குழந்தைகள் மனதில் பதியாதா? இது அறமாகுமா?

சரி, குழந்தைகள் படத்தினைப் பார்க்க வருவார்கள் என்று தெரியும்தானே... அவர்களைக் கவர ஏகப்பட்ட காட்சிகள் படத்தில் உண்டுதானே... பின்னர் எதற்கு இத்தனை வன்முறை? எதற்கு இத்தனைக் கொடூரம்? எதற்கு இத்தனை ரத்தக்காட்சிகளும் சிதறல்களும்? படத்தின் ஆரம்பத்திலேயே பயம் தொற்றிக்கொண்டபின்னர், குழந்தைகளால் எப்படி படத்தைப் பார்க்க முடியும்?

எல்லாம் முடிந்துவிட்டு கடைசியில் பறவைகளுக்குத் தண்ணீர் வையுங்க என்றால், அவர்கள் எப்படி வைப்பார்கள்? பறவை என்றாலே ஒரு பயத்தைப் படம் முழுக்க உண்டுசெய்துவிட்டு, ஒன்லைனரில் நல்ல விஷயம் சொல்வது எப்படிப் பதியும்? வார்த்தைகளைவிட, அதனை ஒரு காட்சியாகவாவது வைத்திருக்க வேண்டும்.

இவை எல்லாம் ஒரு குழந்தை படம் பார்ப்பதில் இருக்கும் சிக்கல்கள் குறித்தே. டெல்னாலஜி, திரைக்கதை, நடிப்பு, காஸ்டிங், டைரக்‌ஷன் எல்லாம் வேற லெவல்தான். (பறவைகளை வதைக்கக்கூடாது என்றால், அந்த வயோதிகரை வதைப்பதும் தவறுதானே என எங்காச்சும் யாராச்சும் கேட்டிருக்காங்களா?)

அடிப்படையில் எம்.டெக். கம்யூனிகேஷன் பட்டதாரி என்பதால், சில விஷயங்களை சேர்த்துச் சொல்லிவிடுகின்றேன். லேண்ட்லைனுக்கும் டவர் வேண்டும் சார். அப்புறம், அதிக Frequency-ல் தரீங்கன்னு சொல்வது டெக்னாலஜிப்படி சாத்தியமில்லை, ஒவ்வொருவருக்கு ஒரு Band மட்டுமே allocated. மேலும், செல்போன்களால் எல்லா உயிர்களுக்கும் பாதிப்பு உண்டு, மனிதனுக்கும் இன்னும் அதிகமாகவே உண்டு (நிரூபிக்கப்பட்ட ஒன்று).

படம் பார்த்துவிட்டேன் என்றதும், பல நண்பர்கள், ‘குழந்தைகளை அழைத்துச் செல்லலாமா? பிடிக்குமா?’ என்று கேட்டார்கள். “மேகி நூடுல்ஸ் பார்க்க நன்றாகவும் சுவையாகவும் இருக்கும். அதற்காக குழந்தைகளுக்குக் கொடுப்பீர்களா?” என்று பதில் சொல்லலாம் எனத் தோன்றியது. ‘எப்பவாச்சும் கொடுப்பதால் என்ன கெடுதல் வந்திடப்போகுது?’ என்ற பதில் வருமே என்றும் அச்சமாக இருக்கின்றது.

ஃபேண்டசி கதையில் லாஜிக் பார்க்கக் கூடாது. ஆனால், அறம் பார்க்கவேண்டும். டாட்” எனத் தெரிவித்துள்ளார் விழியன்.

Google+ Linkedin Youtube