மேகேதாட்டு அணை விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் காவிரி ஆணையம் இன்று கூடுகிறது

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் டெல்லியில் இன்று நடக் கிறது. மேகேதாட்டு அணை திட்டத் துக்கு கர்நாடகாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய விவ காரத்தை இந்தக் கூட்டத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி அரசுகள் கிளப்ப வாய்ப்புள்ளது.

தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 15-ம் தேதி இறுதித் தீர்ப்பு அளித்தது. அதன்படி, ஜூன் 22-ம் தேதி காவிரி மேலாண்மை ஆணை யம் அமைக்கப்பட்டது. ஆணையத் தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் உசேனும் செயலாளராக மத்திய நீர்வளத்துறை தலைமைப் பொறி யாளர் ஏ.எஸ்.கோயலும் நியமிக்கப் பட்டன‌ர்.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இந்த ஆணையம் இயங் குகிறது. இதில் மத்திய நீர்வளத் துறை ஆணைய தலைமைப் பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண் ஆணையத்தின் ஆணை யர் ஆகியோர் நிரந்தர‌ உறுப்பினர் களாகவும் மத்திய பொதுப்பணித் துறை இணைச் செயலர், மத்திய வேளாண் துறை இணை செயலர் ஆகியோர் பகுதி நேர உறுப்பினர் களாகவும் உள்ளனர். மேலும் கர்நாடகா, தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநில அரசுகளின் நீர்ப்பாசனத் துறை செயலர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழக அரசு தரப்பில் பொதுப்பணித் துறை செயலர் எஸ்.கே.பிரபாகர் உறுப்பினராக உள்ளார்.

ஜூலையில் முதல் கூட்டம்

இந்த ஆணையத்தின் முதல் கூட்டம், கடந்த ஜூலை மாதம் நடந்தது. அதனைத் தொடர்ந்து மாதந்தோறும் கூட்டம் நடந்து வருகிறது. அதன்படி, இந்த மாதத் துக்கான கூட்டம், ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் தலைமையில் டெல்லியில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் சார்பில் நியமிக்கப் பட்டுள்ள உறுப்பினர் எஸ்.கே.பிர பாகர் டெல்லி புறப்பட்டு சென்றுள் ளார். ஏற்கெனவே நடந்த கூட்டங் களில் முக்கிய முடிவுகள் ஏதும் எடுக்கப்படாததால் முக்கியத்துவம் பெறவில்லை. தற்போது மேகே தாட்டு அணை விவகாரம் எழுந் துள்ள நிலையில், இன்றைய கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என ஆணைய தலைவரிடம் தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்படும் என தெரிகிறது. அப்போது, ‘உச்ச நீதி மன்ற உத்தரவின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்துக்குத் தான் எல்லா அதிகாரமும் உள்ளது. அணையை கட்டுவது, நீரை திறப் பது, நதி நீர் பங்கீடு தொடர்பான விவகாரங்கள் அனைத்தும் காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரத்துக்கு உட்பட்டது. ஆணையத்துடன் கலந்தாலோசிக் காமல் கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள அமைச்சகம் எப்படி ஒப்புதல் வழங்க முடியும்’ என்று தமிழகம் தரப்பில் கேள்வி எழுப்பப்படும் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் அணை கட்டுவது குறித்த அறிவிப்பை கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டார். ரூ.5,912 கோடி செலவில் இந்த அணை கட்டப்படும் என்றும் இதன்மூலம் பெங்களூரு, மைசூரு, மாண்டியா மாவட்டங்களில் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

தமிழகத்தில் கடும் எதிர்ப்பு

கர்நாடக அரசின் திட்டத்துக்கு அப்போதே தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. புதிய அணை கட்ட கர்நாடகாவுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மத்திய அரசிடம் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.

இந்நிலையில், கர்நாடகாவில் தற்போது அமைந்துள்ள குமாரசாமி தலைமையிலான அரசு, மேகேதாட்டு அணை திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளது. இதற்கான சாத்தியக்கூறு அறிக் கையை தயாரித்து, மத்திய நீர்வள ஆணையத்துக்கு கடந்த செப்டம்பரில் அனுப்பியது. இதுகுறித்து தமிழகம், கேரளா, புதுச்சேரி மாநில அரசுகளின் கருத்தை மத்திய நீர்வள ஆணையம் கோரி இருந்தது. கர்நாடக அரசின் அறிக்கையை நிராகரிக்கும்படி தமிழக அரசு தெரிவித்தது. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் கே.பழனிசாமி கடிதம் எழுதினார்.

உச்ச நீதிமன்றத்தில் மனு

இந்நிலையில், மேகேதாட்டு அணை மற்றும் குடிநீர் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேகேதாட்டு அணை தொடர்பான கர்நாடக அரசின் சாத்தியக்கூறு அறிக்கைக்கு நீர்வள ஆணையம் அளித்த ஒப்புதலை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் என கூறியுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி, இதுதொடர்பாக வரும் 6-ம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கர்நாடகா ஆலோசனை

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் குமாரசாமி தீவிர ஆலோசனை நடத்தினார். நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவகுமார், காவிரி நீர்ப்பாசன கழக அதிகாரிகள் பங்கேற்ற இந்த ஆலோசனையின்போது, மேகேதாட்டு அணை திட்டத்தை எதிர்க்கும் தமிழக அரசை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்தும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்னர் மூத்த வழக்கறிஞர்கள் பி. வி.ஆச்சார்யா, நாகேஸ்வர ராவ், ரவிவர்ம குமார் உள்ளிட்டோருடன் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து டெல்லி புறப்பட்டுச் சென்ற அமைச்சர் டி.கே.சிவகுமார், கர்நாடக அரசின் சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான ஃபாலி எஸ்.நாரிமனை சந்தித்து பேசினார். அப்போது மேகேதாட்டு திட்டத்துக்கு எதிராக தமிழகம் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மத்திய அரசின் அனுமதியை வைத்து, சட்ட ரீதியான அனுமதி பெறுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு டி.கே.சிவகுமார் வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

Google+ Linkedin Youtube