நாசர் மகனின் கனவை நனவாக்கிய விஜய்: சமூகவலைத்தளத்தில் குவியும் பாராட்டு - வைரலாகும் புகைப்படம்

தன்னுடைய பிறந்தநாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என்ற நாசர் மகன் பைசலின் ஆசையை நனவாக்கியுள்ளார் விஜய். இதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

நடிகர் சங்கத் தலைவரும், முன்னணி நடிகருமான நாசரின் மகன் பைசல். சில வருடங்களுக்கு முன்பு ஈசிஆர் சாலையில் நடைபெற்ற விபத்தில் சிக்கினார். அதிலிருந்தே வீட்டிலிருந்தபடியே சிகிச்சை எடுத்து வருகிறார்.

பைசல் தீவிரமான விஜய் ரசிகர். இதை அறிந்த விஜய், அவ்வப்போது நாசர் வீட்டுக்குச் சென்று பைசலையுடன் நேரம் செலவிட்டு வந்தார். இப்போது பைசல் நல்ல நிலைக்குத் திரும்பியுள்ளார்.

டிசம்பர் 1-ம் தேதி பைசலுக்கு பிறந்தநாள். தனது பிறந்தநாளை விஜய்யுடன் கொண்டாட வேண்டும் என விரும்பியிருக்கிறார். இத்தகவல் விஜய்க்கு தெரிவிக்கப்படவே, கண்டிப்பாக என்று தெரிவித்திருக்கிறார். நேற்று (டிசம்பர் 1) ரமேஷ்கண்ணாவின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொண்டார். அப்போது நாசரின் வீட்டுக்கு திடீரென்று விஜயம் செய்து, பைசலுக்கு ஆச்சர்யம் அளித்திருக்கிறார். அவரது பிறந்தநாளைக் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.

இப்புகைப்படங்களை நாசரின் மனைவி கமீலா நாசர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “விஜய் அண்ணாவுடன் பிறந்தநாள் கொண்டாட வேண்டும் என்ற உன் கனவு நனவாகியுள்ளதே” என்று தெரிவித்திருக்கிறார்.

விஜய்யின் இந்தச் செயலால் சமூகவலைத்தளத்தில் அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணமுள்ளன. மேலும், கமீலா நாசர் பகிர்ந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

Google+ Linkedin Youtube