அஜித்தின் புதிய வீடு

அஜித் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும் படம் ‘விஸ்வாசம்’. சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், அஜித் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ‘தூக்கு துரை’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அஜித். தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, டி.இமான் இசையமைத்துள்ளார். மதுரை மற்றும் தேனிப் பின்னணியை கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் ராஜமுந்திரியில் செட் போட்டு படமாக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான ‘பிங்க்’ பாலிவுட் படத்தின் ரீமேக் இது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார் அஜித். ஐந்து கிரவுண்டு பரப்பளவில் உருவாகிவரும் இந்த வீட்டில், டிஜிட்டல் தியேட்டர், டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ என சகல வசதிகளும் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Google+ Linkedin Youtube