சீன ஓபன் டென்னிஸ்: ஷரபோவாவை வீழ்த்தினார், ஹாலெப்

பீஜிங்,

சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை மரிய ஷரபோவாவுடன் (ரஷியா) பலப்பரீட்சை நடத்தினார்.

அதிரடியான ஷாட்டுகளால் ஷரபோவாவை கலங்கடித்த ஹாலெப் 6-2, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றிக்கனியை பறித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் இருந்தே சர்வீஸ் போடுவதில் தடுமாறிய ஷரபோவாவின் சவால் 72 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இதன் மூலம் சமீபத்தில் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றில் ஷரபோவாவிடம் அடைந்த தோல்விக்கு ஹாலெப் பழிதீர்த்துக் கொண்டார். ஷரபோவாவுக்கு எதிராக 8-வது முறையாக மோதிய ஹாலெப் அதில் பெற்ற முதல் வெற்றி இது தான்.

30 வயதான ஷரபோவா, ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கி 15 மாதங்கள் தடையை அனுபவித்து விட்டு கடந்த ஏப்ரல் மாதம் மறுபிரவேசம் செய்தார். அதன் பிறகு இன்னும் ஒரு பட்டமும் வெல்லாத ஷரபோவா தரவரிசையில் தற்போது 104-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலெப் கூறுகையில், ‘ஷரபோவாவுக்கு எதிராக எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாக நினைக்கிறேன். எனது சர்வீசும் நன்றாக இருந்தது. இதற்கு முன்பு நான் ஷரபோவாவை வீழ்த்தியதில்லை. அதனால் இந்த வெற்றி கொஞ்சம் சிறப்பு வாய்ந்தது தான். இந்த தருணத்தை உற்சாகமாக அனுபவிக்க விரும்புகிறேன்’ என்றார்.

ஏமாற்றத்திற்குள்ளான ஷரபோவா கூறுகையில், ‘ஹாலெப்பின் ஆட்டம் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. பந்தை வலுவாக திருப்புவதில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் அதிகமாக தவறுகள் செய்யவில்லை. அவரது சர்வீசும் அபாரமாக இருந்தது. அதே சமயம் எனது ஆட்டத்தில் துல்லியம் இல்லை’ என்றார்.

பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா) தனது 2-வது சுற்றில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சமந்தா ஸ்டோசுரை வெளியேற்றினார். இந்த ஆண்டில் அவர் ருசித்த 40-வது வெற்றி இதுவாகும்.

இதன் மூலம் சிங்கப்பூரில் வருகிற 22-ந்தேதி தொடங்கும் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டிக்கு 7-வது வீராங்கனையாக ஆஸ்டாபென்கோ தகுதி பெற்றார். பெண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் விளையாட இருப்பது இதுவே முதல் முறையாகும்.

ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் 7-6, 7-5 என்ற நேர் செட்டில் அர்ஜென்டினாவின் ஜூவான் மார்ட்டின் டெல் போட்ரோவுக்கு அதிர்ச்சி அளித்தார். பாவ்டிஸ்டா அகுத் (ஸ்பெயின்), ஸ்டீவ் டார்சிஸ் (பெல்ஜியம்), நிக் கைர்ஜியோஸ் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- ஷூய் பெங் (சீனா), ரோகன் போபண்ணா (இந்தியா)-பாப்லோ கியூவாஸ் (உருகுவே) ஆகிய ஜோடிகள் கால்இறுதிக்கு முன்னேறி உள்ளன.

Google+ Linkedin Youtube