ஸ்டெர்லைட் வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் ஜனவரி 8-ல் விசாரணை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கும் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் ஜனவரி 8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமம் 2018 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றாத காரணத்தால், உரிமத்தை நீட்டிப்பது தொடர்பான ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பம் ஏப்ரல் 9-ல் நிராகரிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆலைக்கான மின்சாரம் மற்றும் தண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக கடந்த மே 28-ல் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர். இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது.

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னாள் தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவானது, நேரடியாக ஆய்வு செய்து பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

அதனடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க தமிழக அரசு அனுமதிக்க கடந்த 15-ம் தேதி உத்தரவிட்டனர். இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு, மனுவை விசாரணைக்கு எடுத்து கொள்வது குறித்து இன்று பரிசீலித்தது. அப்போது  இருதரப்பு  வழக்கறிஞர்களும் ஆஜராகினர். அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கண்ணா, இந்த வழக்கில் ஆவணங்களை சரியான முறையில் தீர்ப்பாயம் ஆராயவில்லை என தெரிவித்தார்.

வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்டெர்லைட் ஆலையில் அமிலத்தை சேமித்து வைக்கபோதுமான ஏற்பாடுகள் இல்லாததால் ஆலையை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதையடுத்து தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஜனவரி 8-ம் தேதி விசாரணை தொடங்கும் என அறிவித்தனர்.

Google+ Linkedin Youtube