த்ரிஷா என் கன்னத்தைக் கிள்ளினார்: துருவ் விக்ரம்

த்ரிஷா என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார் என துருவ் விக்ரம் தெரிவித்தார்.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி, பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'அர்ஜுன் ரெட்டி'. இப்படம் ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

‘வர்மா’ படத்தில் மேகா என்ற மாடல், துருவ் விக்ரம் ஜோடியாக நடித்துள்ளார். ஏற்கெனவே ஒரு பெங்காலிப் படத்தில் நடித்திருக்கும் மேகா, ‘வர்மா’ மூலம் தமிழில் அறிமுகமாகிறார். பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ இந்தப் படத்தை வழங்க, இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்துக்கு ‘குக்கூ’, ‘ஜோக்கர்’ படங்களின் இயக்குநர் ராஜு முருகன் வசனம் எழுதியுள்ளார்.

ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. டிசம்பர் வெளியீடாகத் திரைக்கு வரும் என்று அறிவித்தது படக்குழு. தற்போது, இப்படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்றியுள்ள சக்திவேலன், ‘பிப்ரவரியில் வெளியாகும்’ என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், ‘எந்த நடிகையோடு நடிக்க ஆசை?’ என துருவ் விக்ரமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்குப் பதிலளித்த அவர், “சிறுவயதில் இருந்தே த்ரிஷாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால், இதுவரை அவரைச் சந்தித்தது கூட இல்லை. ஒருமுறை ப்ரிவியூ தியேட்டரில் இருந்தபோது நான் தூங்கிவிட்டேன். அப்போது அவர் வந்து என் கன்னத்தைக் கிள்ளிவிட்டு சென்றுவிட்டார்” எனத் தெரிவித்தார்.

Google+ Linkedin Youtube