சபரிமலை வன்முறை: கேரள அரசிடம் அறிக்கை கேட்கிறது மத்திய அரசு

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இரு பெண்கள் சாமி தரிசனம் செய்ததைத் தொடர்ந்து மாநிலத்தில் நடந்துவரும் வன்முறை தொடர்பாக கேரள அரசிடம் இருந்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை கேட்டுள்ளது.

சபரிமலையில் அனைத்து வயதுப்பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது.இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் நடந்து வருகிறது.

சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய முயன்ற இளம் பெண்கள் பக்தர்களின் எதிர்ப்பால் திரும்பிச்சென்றனர். இந்தச் சூழலில் கடந்த வாரம் இரு பெண்கள் போலீஸார் பாதுகாப்புடன் ஐயப்பனைத் தரிசனம் செய்தனர், நேற்று இலங்கையைச் சேர்ந்த ஒரு பெண் சாமி தரிசனம் செய்தார். இவர்கள் அனைவருமே 50வயதுக்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் சபரிமலைக் கோயிலுக்கு நுழைந்து சாமி தரினம் செய்ததைக் கண்டித்து பாஜக, இந்து அமைப்புகள் கடந்த இரு நாட்களாகப் போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளனர். கேரளாவில் கடந்த இரு நாட்களாக பாஜக, இந்து அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்து, 80-க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இதில் அதிகமாக கண்ணூர், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, காசர்கோடு ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும் பதற்றமாக இருப்பதால், அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கண்ணூர் மாவட்டம், தலச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏல ஷம்ஷீர் வீட்டின் மீது மர்ம நபர்கள் சிலர் நேற்று நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டுத் தப்பினார்கள், கேரள பாஜக எம்.பி. முரளிதரன் வீ்ட்டிலும் மர்மநபர்கள் வெடிகுண்டு வீசினர்.

மாநிலத்தில் பல்வேறு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும், பாஜகவினருக்கும் இடையே கடும்மோதல் நிலவி வருகிறது. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கேரள மாநிலத்தின் நிலவும் சூழல் குறித்து ஆளுநர் பி.சதாசிவத்திடம் அறிக்கை கேட்டுள்ளது.

மாநிலத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு சூழல் குறித்து ஆளுநர் பி.சதாசிவமும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தொலைபேசி மூலம் நேற்று தெரிவித்தார். இருந்தபோதிலும், மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள், பொதுச்சொத்துக்கள் சேதம், அரசியல் தலைவர்கள் வீடுகள் தாக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களை மாநில அரசிடம் இருந்து ஆளுநர் கேட்டுள்ளார்.

இதற்கிடையே மாநிலத்தில் நிலவும் வன்முறைச் சம்பவங்களை போலீஸார் கட்டுப்படுத்த தவறிவிட்டனர் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முதல்வர் பினராயி விஜயன் மறுத்துவிட்டார். அவர் கூறுகையில், “ போலீஸார் எந்தவிதத்திலும் தோல்வி அடையவில்லை. போலீஸார் மிகுந்த பொறுப்புணர்வுடன், முதிர்ச்சி தன்மையுடன் நடந்து கொண்டனர். இந்த வன்முறைக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் தூண்டுதலே காரணம். கேரள மாநிலத்தை கத்திமுனையில் சங்பரிவாரங்கள் வைத்திருக்க அனுமதிக்கமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

மாநிலத்தில் நடந்துள்ள வன்முறை தொடர்பாக இதுவரை 3 ஆயிரத்து 282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், 500-க்கும் மேற்பட்டோர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Google+ Linkedin Youtube