வெற்றியும்.. தேர்தல் கலவரமும்..

சமீபத்தில் நடந்து முடிந்த வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசினாவின் மாபெரும் வெற்றி எதிர்க் கட்சிகள் உள்பட அனைத்து தரப்பையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆளும் அவாமி லீக் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் 95 சதவீத ஓட்டுகளைப் பெற்று 288 இடங்களில் வென்றுள்ளன. எதிர்க் கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பிஎன்பி) 298 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் வெறும் 7 தொகுதிகளை மட்டுமே வென்றுள்ளது.

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஹசினா வெற்றி பெற்றிருப்பதன் மூலம், வங்கதேச மக்கள், நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் நிலையான பொருளாதார வளர்ச்சியை விரும்புவது தெரிகிறது. ஒரே பிரச்சினை, தேர்தலுக்குப் பிறகு நடந்த கலவரங்கள்தான். தேர்தல் நாளில் மட்டுமே 17 பேர் உயிரிழந்தனர்.

மனித உரிமைகளை மதிப்பதில்லை.. சர்வாதிகாரி போல நடந்து கொள்கிறார்.. என ஹசினா மீது கடந்த காலத்தில் பல குற்றச்சாட்டுகளை அவரின் அரசியல் எதிரிகள் சுமத்தியது உண்டு. ஆனால், நிலையான ஆட்சியையும், 7 சதவீத பொருளாதார வளர்ச்சியையும் அடைந்ததற்கு காரணம் ஹசினாதான் என அவரின் ஆதரவாளர்கள் கூறுகிறார்கள். தேர்தலின்போது, 9 சதவீத பொருளாதார வளர்ச்சியை அடைய நடவடிக்கை எடுப்பேன் என ஹசினா வாக்குறுதி அளித்தார். இதன்மூலம், ஏழை, பணக்காரர் இடையேயான இடைவெளி குறையும். அப்படி நடந்தால், வாங்கிய கடனையே கட்ட முடியாமல் திணறி வரும் தெற்கு ஆசிய நாடுகளுக்கு மத்தியில் வங்கதேசம் மிகச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழும்.

இதனிடையே, தேர்தல் நடத்தப்பட்ட முறையையும் அப்போது நடந்த முறைகேடுகளையும் வெளியிட்ட பத்திரிகையாளர்களை குறிவைத்து தாக்கி வருவதாக அச்சம் எழுந்துள்ளது. இது நிலையான ஆட்சி தருவதாக அளித்த வாக்குறுதிக்கு எதிரானது. எதிரிகளே இல்லாத சூழலில், வன்முறையைத் தவிர்த்து பெருந்தன்மையோடு நடந்து கொள்வதுதான் நல்லது.

மீண்டும் வெற்றி பெற்று, ஹசினா பிரதமராகத் தொடர்வது இந்தியாவுக்கு சாதகமான விஷயம்தான். வங்கதேச தேசியவாத கட்சியை விடவும், ஹசினாவின் அவாமி லீக் கட்சி, இந்தியாவுடன் எப்போதுமே நட்பு பாராட்டி வருகிறது. இந்தியாவுக்கு எதிரானஎந்த தீவிரவாத செயல்களையும் தனது நாட்டில் அனுமதிப்பதில்லை என்பதில் ஹசினா உறுதியாக இருந்து வருகிறார். இரு நாடுகளுக்கும் இடையில் ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்தாலும் எதுவுமே தீர்க்க முடியாத பிரச்சினையாக இருந்தது இல்லை.

தீவிரவாதத்தின் மையமாகவும் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத சக்திகளை ஊக்குவிக்கும் அண்டை நாடாகவும் பாகிஸ்தான் இருக்கிறது. ஆனால் ஹசினா அதை என்றுமே அனுமதிப்பதில்லை. தீவிரவாதம் தவிர, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத குழுக்கள் மூலம் மதம் தொடர்பான பயங்கரவாதம் பெருகி வருவதை இந்தியாவும் உலக நாடுகளும் கவலையுடன் உற்றுநோக்கி வருகின்றன. வங்கதேசத்துடன் நீண்ட எல்லை இருப்பதால், தீவிரவாதம், ஊடுருவல், போலி கரன்சி கடத்தல் போன்ற பிரச்சினைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. ஹசினாவின் ஆட்சி தொடர்வதால், இதுபோன்ற மோசமான நடவடிக்கைகள் குறையும். அடுத்தடுத்த ஆண்டுகளில் மேலும் குறையலாம். வங்கதேசத்துடனான நல்ல உறவு, தென்கிழக்கு ஆசியாவில் நல்ல நட்பை விரும்பும் இந்தியாவுக்கு மிகவும் சாதகமாக இருக்கும்.

வங்கதேசத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் சாதகமான சூழலைக் கொண்டு வருவதுதான் ஹசினாவுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும். மோசமான உள்கட்டமைப்பு, ஊழல் மற்றும் வன்முறை போன்ற காரணங்களால் அன்னிய முதலீட்டாளர்கள் வங்கதேசத்தில் முதலீடு செய்யத் தயங்குவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினைகள் எல்லாம் நீங்கி, தெற்கு ஆசிய நாடுகளுக்கு முன்னுதாரணமாக வங்கதேசம் உயரும் என நம்புவோம்.

டாக்டர் ஸ்ரீதர் கிருஷ்ணசுவாமி

எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் பேராசிரியர்

வாஷிங்டனில் பணியாற்றிய பத்திரிகையாளர்

தமிழில்: எஸ்.ரவீந்திரன்

Google+ Linkedin Youtube