நாகர்கோவில் ரெயில் நிலையம் அருகே புதரில் பதுக்கிய 725 கிலோ ரே‌ஷன் அரிசி பறிமுதல்

நாகர்கோவில், 

நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையம் அருகில் உள்ள ஊட்டுவாழ்மடம் ரெயில்வே கிராசிங் பகுதியில் கேரளா செல்லும் ரெயிலில் கடத்திச் செல்வதற்காக ஏராளமான ரே‌ஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. 

அதைத்தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி கோலப்பன் தலைமையில், வருவாய் ஆய்வாளர் கோபால் மற்றும் பணியாளர்கள் நேற்று காலை அப்பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புதர்மண்டிக்கிடந்த ஒரு இடத்தில் சிறு, சிறு பிளாஸ்டிக் சாக்கு மூடைகளாக ஏராளமான மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

அந்த மூடைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது அவற்றில் ரே‌ஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 32 பிளாஸ்டிக் சாக்கு மூடைகளில் 725 கிலோ ரே‌ஷன் அரிசி இருந்தது. ஆட்கள் நடமாட்டம் இல்லாதபோது இந்த அரிசி மூடைகளை ரெயில் நிலையத்துக்கு கொண்டு வந்து, கேரளா செல்லும் ரெயிலில் ஏற்றிச்செல்ல திட்டமிட்டு மர்மநபர்கள் ரெயில்நிலையம் அருகில் உள்ள புதரில் அரிசி மூடைகளை மறைத்து வைத்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

பின்னர் அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து, ஜீப்பில் ஏற்றி நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவற்றை கோணத்தில் உள்ள அரசு நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டனர்.

Google+ Linkedin Youtube