அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

பேருந்தில் கல்லெறிந்தது தொடர்பான வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு எம்.பி., எம்.எல்.ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ண ரெட்டி. இவர் மீதான வழக்கு ஒன்று எம்.பி., எம்எல்ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

1998-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாசனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கள்ளச்சாராய விற்பனை தடை செய்யக்கோரி பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது பாஜகவில் பாலகிருஷ்ண ரெட்டி இருந்தார்.

இதில் பேருந்துகள் மீது கல்லெறியப்பட்டது. பொதுச்சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவின் கீழ் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 108 பேர் மீது போலீஸார் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணை பல ஆண்டுகளாக கிருஷ்ணகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில் பாலகிருஷ்ணரெட்டி 78-வது குற்றவாளியாக இருக்கிறார். இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட நிலையில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சாந்தி இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்தார்.

குற்றம் சாட்டப்பட்ட பாலகிருஷ்ண ரெட்டி உள்ளிட்ட 16 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10,500 அபராதமும் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

Google+ Linkedin Youtube