அமெரிக்காவுக்கு வடகொரியா மிரட்டல் விடுத்த நிலையில் கிம் - ஜி ஜின்பிங் சந்திப்பு

அமெரிக்காவுக்கு விடுத்த மிரட்டல்களுக்கு இடையே சீன அதிபர் ஜின்பிங் அழைப்பின் பேரில் கிம் ஜாங் உன்  சீனா சென்றிருக்கிறார்.

வடகொரிய அதிபர் கிம் திங்கட்கிழமையன்று சீனா புறப்பட்டுச் சென்றதாகவும் அவர் தற்போதுவரை சீனாவில்தான் இருக்கிறார் என்றும் சீன ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.  

கிம்மின் சீனப் பயணம் குறித்த வேறு எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

கடந்த வாரம் புத்தாண்டு உரையில் வடகொரிய அதிபர் கிம், ''உலக நாடுகளின் முன்னிலையில் எங்கள் நாட்டுக்கு அளித்த வாக்குறுதியை அமெரிக்கா ஒருவேளை செய்யத் தவறி எங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதித்தால், நாங்கள் உங்களுக்கு அளித்த உறுதி மொழிகளைக் கைவிட்டு எங்கள் இறையாண்மையைப் பாதுகாப்ப புதிய வழிகளைத் தேர்ந்தெடுப்போம்'' என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் சீனாவுக்கு கிம் பயணம் மேற்கொண்டிருக்கிறார்.

முன்னதாக, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது.

இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது.எனினும் தொடர்ந்து அமெரிக்கா - வடகொரியா இடையே  அணு ஆயுத சோதனைகள் தொடர்பான மோதல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

Google+ Linkedin Youtube