தமிழகத்தில் கமிஷன், கலெக்‌ஷன், கரப்ஷன் ஆட்சி, மத்தியில் பாசிச, நாஜிச ஆட்சி: ஸ்டாலின் பேச்சு

மோடி பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். விவசாய நிலங்களை அழித்து, ஒழித்து கார்ப்பரேட் நிறுவனத்தை உருவாக்க ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என ஸ்டாலின் பேசினார்.

இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் புலிவலம் ஊராட்சியில் “தி.மு.க ஊராட்சி சபைக் கூட்டத்தை” தொடங்கி வைத்துப் பேசினார்.

அவரது பேச்சு வருமாறு:

”இன்று திமுக சார்பில் தமிழகத்தில் உள்ள 12,617 ஊராட்சிகளில் இதுபோன்ற கிராம சபைக் கூட்டங்களை நடத்திட வேண்டுமென முடிவெடுத்து, அந்தப் பணியை நியாயமாக கடந்த 3-ம் தேதி தொடங்கியிருக்க வேண்டும்.

நான் 3-ம் தேதி என அறிவித்தவுடன் வேண்டுமென்றே திட்டமிட்டு,  இதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு, 2-ம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள்.

2-ம் தேதி என்றால் நாங்கள் சட்டமன்றத்துக்கு போக மாட்டோம், இந்த ஊராட்சி சபைக் கூட்டத்துக்கு வந்து விடுவோம் என்று கருதி அந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். ஆனால், சட்டமன்ற கூட்டத்தொடர் மிக முக்கியமானது.

இன்றைக்கு தமிழ்நாட்டில் மேகதாது பிரச்னை, ஸ்டெர்லைட் பிரச்னை, விவசாயிகள், அரசு ஊழியர்கள் என அனைத்துத் தரப்பு மக்களின் பிரச்னைகளும் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கின்ற நிலையில், சட்டமன்றக் கூட்டத்துக்கு செல்ல வேண்டுமென முடிவுசெய்து, இதனை இன்றைக்கு தொடங்கியிருக்கிறோம்.

இன்று நான் கருணாநிதியை ஈன்றெடுத்த திருவாரூர் மாவட்டத்தில் உள்ள புலிவலம் பகுதியிலே தொடங்குகிறேன். துரைமுருகன் ஈரோட்டிலே தொடங்குகிறார். டி.ஆர்.பாலு காஞ்சிபுரத்திலே இந்தக் கூட்டத்தை தொடங்குகிறார். அதேபோல, அந்தந்த மாவட்டங்களில் இருக்கக்கூடிய மாவட்டக் கழகச் செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் இன்னாள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய பயணத்தை தொடங்கவிருக்கிறார்கள்.

 இந்தப் பயணம் பிப்ரவரி 17 வரையிலே நடைபெறவிருக்கிறது. இந்தப் பயணத்திற்கு, “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற முழக்கத்தை வைத்துள்ளோம். அந்த அடிப்படையில் உங்களையெல்லாம் சந்திக்க வந்திருக்கிறோம்.

உங்கள் பிரச்னைகளை கேட்டு அதற்கான பரிகாரத்திலே ஈடுபட்டு உங்கள் மனங்களை வெல்லக்கூடிய வகையில் இந்தக் கூட்டங்கள் நடைபெறவிருக்கிறது.  அதனால் தான் இந்த கிராம சபை நிகழ்ச்சிக்கு “மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற தலைப்பிலே பயணத்தை நடத்த புறப்பட்டு இருக்கிறோம்.

மகாத்மா காந்தி அவர்கள் கிராமத்தைத் தான் கோயில் எனச் சொல்வார். கிராமம் தான் முக்கியம். கிராமம் இல்லையென்றால், நகரம் இல்லை மாநகரம் இல்லை. கிராமம் தான் உயிர் நாடி. அப்படிப்பட்ட கிராமத்திற்கு வந்திருக்கிறோம். இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், அரசியலே இதுபோன்ற கிராமங்களில் தான் உருவாகியிருக்கிறது.

எம்எல்ஏ.க்களை தேர்ந்தெடுத்து அனுப்புகிறவர்கள் நீங்கள். இவர்கள் சென்னையில் போய் பணியாற்றுகிறார்கள். இவர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது. தேர்தல் வந்தால், அரசியல் கட்சிகள் வருவார்கள், வாக்குகள் கேட்பார்கள். நீங்களும் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிப்பீர்கள்.

க்யூவில் சென்று நிற்பீர்கள். படித்தவர்கள் அதிகாக வாக்களிக்கச் செல்வதில்லை, ஆனால் அவர்கள் தான் அதிகம் குறை சொல்வார்கள். ஏற்கனவே தலைவர் கருணாநிதியை அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தவர்கள் நீங்கள். நமக்கெல்லாம் ஒரு பெரிய குறை. தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே என்று.

அந்தக் குறையை யாராலும் நிவர்த்தி செய்ய முடியாது. அந்த இடத்தை பூர்த்தி செய்ய இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டால் நாம் தான் வெற்றி. அதில் எள்ளளவும் சந்தேகமும் கிடையாது. ஆனால், 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல், ஒரு ஓரவஞ்சனையாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இப்படி, தேர்தல் கமிஷன் கூட்டு வைத்துக்கொண்டு திட்டமிட்டு பணத்தை கொடுத்து மக்களின் பல்ஸ் பார்த்து விடலாம் என அவர்கள் முயற்சித்தார்கள். ஆனால், நீதிமன்றத்திற்கு இந்தப் பிரச்னை போகிறது. 11 மணிக்கு தேர்தல் நிறுத்தப்படுகிற சூழல் ஏற்பட்டால், தேர்தல் ஆணையத்துக்கு அவமானம் என்பதல் காலை 6 மணிக்கே தேர்தலை ரத்து செய்து விட்டார்கள். அந்தப் பிரச்னைக்குள் நான் போக விரும்பவில்லை.

நான் இந்த கிராம சபையை இன்றைக்கு திருவாரூர் தொகுதியில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் நடத்துவற்குக் காரணம் விரைவிலே நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமா அல்ல சட்டமன்றத் தேர்தலுமா? உள்ளாட்சித் தேர்தலுமா? என தெரியவில்லை.

எது எப்படி இருந்தாலும், மத்தியில் உள்ள மோடியின் ஆட்சியால் எவ்வளவு கொடுமைகள் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். மதவாதம் பிடித்துத் திரியும் மோடி ஆட்சிக்கு துதி பாடக்கூடிய ஆட்சியாக  எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருக்கக்கூடிய ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கறது என்பது உங்களுக்குத் தெரியும்.

மோடி பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். விவசாய நிலங்களை அழித்து, ஒழித்து கார்ப்பரேட் நிறுவனத்தை உருவாக்க ஆட்சி செய்து கொண்டிருக்கிறார். ஆட்சியில் ஒட்டி இருக்க வேண்டுமென்பதால் என்ன வேண்டுமானாலும் எடுபிடி வேலைகள் செய்யலாம், அடிபணிந்து இருக்கலாம் என்கிற நிலையில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி இருக்கிறது.

அண்மையில் கஜா புயல் வந்தபோது, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள் எல்லாம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்தது என்பது உங்களுக்குத் தெரியும். அப்போது இந்த ஆட்சியாளர்கள் எவ்வளவு மோசமாக செயல்பட்டார்கள் என்பதும் தெரியும். இந்நேரம் தலைவர் மட்டும் முதல்வராக இருந்திருந்தால், அடுத்த நிமிடம் தஞ்சாவூர் வந்திருப்பார்.

புயல் பாதித்த திருவாரூர் வந்திருப்பார். நாங்கள் மட்டும் போகிறோம் எனச்சொன்னால் கூட கேட்டிருக்க மாட்டார். என்றைக்காவது ஒரு நாள் தலைவர் ஹெலிகாப்டரில் சென்று பார்த்திருக்கிறீர்களா? டெல்லிக்குப் போனால் மட்டுமே விமானத்தில் போவார். அரசு சார்பில் ஸ்பெஷல் விமான வசதி கூட இருக்கிறது. ஆனால், மக்களோடு மக்களாக இருந்தால் மட்டுமே அவர்களுடைய குறைகளை புரிந்து அறிந்துகொண்டு செயல்பட முடியும் என்று கார், இரயில் பயணங்களை தலைவர் மேற்கொள்வார்.

தமிழ்நாட்டில் ஒரு முதல்வர் இப்போது இருக்கிறார். ஹெலிகாப்டரில் முதல்வர் பறந்து கொண்டிருக்கும் போது அதைப்பார்த்து கும்பிட்டவர் எல்லாம் அதிஷ்டத்தில் இன்றைக்கு ஹெலிகாப்டரில் பறந்து கொண்டிருக்கிறார். போகட்டும் நான் வேண்டாம் எனச் சொல்லவில்லை.

கஜா புயலால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, இருக்க இடமில்லாமல், உண்ண உணவு இல்லாமல், தொலைபேசி இணைப்பு இல்லாமல், ஊருக்கே படி அளந்தவர்கள் தவித்தார்கள்.

அவர்களுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் வானத்திலே பறந்துகொண்டு, வானிலை நிலைமை சரியில்லை என திரும்பிப் போன முதலமைச்சர் இங்கு இருக்கிறார். இதையெல்லாம் நீங்கள் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

நானும் விவசாயி என அடிக்கடி சொல்லுவார் எடப்பாடி பழனிசாமி. ஆனால் விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளக்கூடிய ஒருவராகத் தான் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி இருந்துகொண்டிருக்கிறார். எட்டு வழிச்சாலை அமைக்கிறேன் என்கிற பெயரில் விவசாய நிலங்களை பறிப்பது, விளை நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைப்பது என இதைத்தான் முதலமைச்சர் செய்து கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு தமிழகத்தில் கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன் ஆட்சியும், மத்தியில் பாசிச – நாசிச ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் நன்கு அறிந்து வைத்திருப்பீர்கள் என நம்புகிறேன். கிராம சபைக்கு பஞ்சாயத்து ராஜ் என்று பெயர்.

ஆனால், இப்பொழுது இருக்கும் இந்த அதிமுக ஆட்சிக்கு கரப்ஷன் ராஜ் – கமிஷன் ராஜ் என்று சொல்லலாம். மோடி ஆட்சிக்கு பாசிச ராஜ் என்றும் நாசிச ராஜ் என்றும் சொல்லலாம். இந்தக் கொடுமை நிலையை மாற்ற வேண்டுமென்றால் மக்கள் ராஜ் அது தான் பஞ்சாயத்து ராஜ்.

இந்தக் கூட்டத்தின் நோக்கத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தேர்தல் வருகிறதோ இல்லையோ, உங்களைத் தேடி இன்றைக்கு நாங்கள் உங்கள் குறைகளை கேட்க வந்திருக்கிறோம். இதேபோல், நமக்கு நாமே பயணத்திலும் பலதரப்பட்ட மக்களைச் சந்தித்தோம். அதன்பலனாய் மிகப்பெரிய எதிர்க்கட்சியாக சட்டமன்றத்திலே அமர்ந்தோம்.

பலபேர் இன்னும் திமுக தான் இன்றும் ஆளுங்கட்சியாக இருக்கிறது என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தளவுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் திமுக துணை நிற்கிறது. நான் உங்களையெல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புவது எந்தத் தேர்தல் வந்தாலும், அதில் திமுக வெற்றிபெற நீங்கள் எல்லாம் உழைப்பீர்கள் என நம்புகிறேன்.

பல்வேறு குறைகளோடு நீங்கள் இங்கு வந்திருப்பீர்கள். ஒவ்வொருவராக உங்களுடைய பிரச்னைகளை நீங்கள் என்னிடத்திலே சொல்லுங்கள். சொல்ல முடியாதவர்கள் எழுதிக் கொடுங்கள், அதனை நான் குறித்து வைத்துக்கொண்டு தேர்தல் வருகிறபோது அது நாடாளுமன்றமாக இருந்தாலும், சட்டமன்றமாக இருந்தாலும் எந்தத் தேர்தல் வந்தாலும் தேர்தல் அறிக்கைகளில் உறுதிமொழியாக நிச்சயம் அளிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்கிற உறுதியை சொல்லி என்னுடைய முன்னுரையை நான் நிறைவு செய்கிறேன்.”

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Google+ Linkedin Youtube