கூடுதல் விலைக்கு சினிமா டிக்கெட் விற்கும் திரையரங்குகள்: செய்தியாளரின் கள ஆய்வு

தமிழக தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட்டின் விலை ரூ. 165 மட்டுமே. ஆனால் முதல் 10 நாட்கள் கூடுதலாக 15 சதவீதம் வரை விலை வைத்து டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. இது குறித்த ஒரு செய்தியாளரின் கள ஆய்வு.

சென்னை உட்பட பல மாவட்டங்களில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகைக்கு தியேட்டரில் டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதுகுறித்து நாம் கள ஆய்வு செய்தபோது சென்னையில் பிரபலமான தியேட்டர் ஒன்றில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதுகுறித்து நாம் சேகரித்த தகவலும் தியேட்டர் தரப்பின் பதிலும்:

சென்னை மாநகராட்சியில் உள்ள மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ. 165, மற்ற மாநகராட்சிகளில் உள்ள மல்டி ப்ளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்சமாக ரூ.140 வரை மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என தமிழக அரசு ஆணை உள்ளது. இந்தக் கட்டணம் இதர மொழிப் படங்களுக்கு சற்று கூடுதலாக இருக்கும். ஏனென்றால் பிற மொழிப் படங்களுக்கான வரி அதிகம்.

இதுகுறித்து நேரடி கள ஆய்வை மேற்கொண்டோம்.  சென்னை அண்ணா சாலையில் இருக்கும் தேவி திரையரங்கில் படம் வெளியாகும் முதல் 10 நாட்களில் மட்டும் அனுமதிக்கப்பட்ட கட்டணத்துக்கும் அதிகமாக வசூலித்து வருகிறார்கள். கடந்த டிசம்பர் மாதம் 21 ஆம் தேதி அன்று நான்கு படங்கள் வெளியாகின. அதில் 'மாரி 2', 'அடங்க மறு'  ஆகிய திரைப்படங்களுக்கு தேவி திரையரங்க கவுன்ட்டரில் டிக்கெட் விலை ரூ. 206. 'கனா' படத்துக்கு கவுன்ட்டரில் வாங்கிய டிக்கெட்டின் விலை ரூ. 165.

ஆனால், அதே நாளில் சத்யம் திரையரங்கில்  'மாரி 2', 'அடங்க மறு'  ஆகிய திரைப்படங்களுக்கு கவுன்ட்டரில் டிக்கெட் விலை ரூ.165க்கு விற்கப்பட்டது.

விலையில் ஏன் இந்த வித்தியாசம். இரண்டுமே தமிழ்ப் படங்கள் தானே என்று நம் தரப்பில் கேட்டதற்கு தேவி திரையரங்கத்தின் கவுன்ட்டரில் இருப்பவரால் பதில் சொல்ல முடியவில்லை. வழக்கம் போல, மேனேஜரிடம் கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்.

மேற்கொண்டு இது தொடர்பாக தேவி திரையரங்கத்தின் மேனேஜரிடம் கேட்டோம். அப்போது அவர் கூறிய பதில், "தமிழ்நாட்டில் எங்கள் தியேட்டரில் ஸ்பெஷல் ரேட்டில் டிக்கெட் விற்க  காவல் ஆணையர் அலுவலகத்தில் அனுமதி வாங்கியுள்ளோம். எங்களுடன் புரசைவாக்கத்தில் உள்ள பிரபல தியேட்டரும் அனுமதி பெற்றுள்ளது. அந்த அனுமதிக்கான நகல் எங்களிடம் உள்ளது" என்று தெரிவித்தார்.

மேலும், ''பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கும் 'பேட்ட' மற்றும் 'விஸ்வாசம்' படங்களின் டிக்கெட் விலை, முதல் சில நாட்களுக்கு ரூ. 206க்கு விற்பனை செய்ய உள்ளோம்'' என்றார்.

இந்நிலையில் திடீரென ஜிஎஸ்டி விலை குறைக்கப்பட்டதால் சென்னை மல்டிபிளெக்ஸ் திரையரங்கில் தமிழ்ப் படங்களுக்கான ஒரு டிக்கெட் விலை ரூ.153க்கு விற்க வேண்டும். ஆனால், 'பேட்ட', 'விஸ்வாசம்' படங்களுக்கு திரையரங்க கவுன்ட்டர்களில் ரூ.190க்கு விற்கப்படுகிறது.  இதில் பிளாக் டிக்கெட் குறைந்த பட்சம் 500 ரூபாயிலிருந்து அதிகபட்சம் 1000 ரூபாய்க்குள் விற்கப்படுகிறது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ள சமூக ஆர்வலர் தேவராஜ் என்பரிடம் 'இந்து தமிழ் திசை' சார்பில் கேட்டபோது அவர் கூறியதாவது:

திரைப்படம் மற்றும் திரையரங்கு சார்பாக என்னென்ன வழக்குகள் போட்டுள்ளீர்கள்?

திரையரங்கு பார்க்கிங் கட்டணம், அரசாங்க விடுமுறை இல்லாத நாட்களில் அதிக காட்சிகளை இயக்குவது மற்றும் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலை விற்பது அதாவது ஸ்பெஷல் ரேட்டுக்கு விற்பனை செய்வதை எதிர்த்து வழக்கு போட்டுள்ளேன்.

கூடுதல் விலைக்கு விற்பது குறித்து தியேட்டர் நிர்வாகம் சார்பில் காவல்துறையில் அனுமதி பெற்றதாகச் சொல்கிறார்களே?

கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதற்கு காவல்துறையிடம் அனுமதி பெற முடியாது. அரசாங்கத்திடம்தான் அனுமதி பெறவேண்டும். அவர்கள் காவல் ஆணையர் அலுவகத்தில் அனுமதி பெற்றதாகத் தெரிவித்திருந்தால் அது உண்மைக்குப் புறம்பான தகவல். அனுமதி என்னிடம் இருக்கிறது என்று தியேட்டர் நிர்வாகம் தெரிவித்தால் அது ஏமாற்று வேலை. இகு குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்  புகார் கொடுத்தும் இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் போலீஸார்  எடுக்கவில்லை.

இதுகுறித்து சமீபத்தில் என்ன வழக்கு போட்டுள்ளீர்கள்?

தற்போது '2.0' படத்தின் டிக்கெட் விற்பனை மற்றும் வெளியாகவுள்ள 'பேட்ட', 'விஸ்வாசம்' ஆகிய  படங்களின் டிக்கெட்டுகளை கூடுதல் விலைக்கு விற்கக்கூடாது. அதிக காட்சிகள் குறித்து போட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் இடைக்கால உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. அதில் திரையரங்குகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பது சம்பந்தமாக சென்னையில் காவல்துறையும், பிற மாவட்டங்களில் ஆட்சியர்களும் பொறுப்பு.

எந்த வகையில் அவர்கள் எதையெல்லாம் மீறுகிறார்கள்?

அரசாங்கத்தின் மூன்று வகையான அரசாணைகளை மீறுகிறார்கள் ஒன்று பார்க்கிங் குறித்த விலை நிர்ணயம், இரண்டு கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்கக்கூடாது என்கிற ஆணை, மூன்று அனுமதிக்கப்பட்டதைவிட கூடுதல் காட்சிகளை இயக்குவது ஆகிய மூன்று அரசாணைகளை மீறுகிறார்கள்.

இதில் 1200 திரையரங்குகளில் 900 திரையரங்குகள் உயர் நீதிமன்ற உத்தரவை முறையாகப் பின்பற்றவில்லை. இதைக் கண்காணிக்க வேண்டியவர்களும் அதைக் கண்டுகொள்ளவில்லை.

இவ்வாறு தேவராஜ் தெரிவித்தார்.

என்னதான் அரசு ஆணை பிறப்பித்தாலும் அதைக் கண்காணிக்கும் இடத்தில் இருக்கும் அதிகாரிகளின் அசட்டை காரணமாக வரம்புகள் மீறப்படுகின்றன. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்களே.

பண்டிகை போன்ற விசேஷ நாட்களில் அதிக காட்சிகளை இயக்கி, பொதுமக்களிடம் கூடுதல் விலைக்கு டிக்கெட்டுகளை விற்பனை செய்து, கூடுதல் கட்டணத்தில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நிகழ்வு இனியும் தொடரத்தான் போகிறதா?

Google+ Linkedin Youtube