பொங்கல் பரிசு ரூ.1000: உத்தரவை மாற்ற தமிழக அரசு முறையீடு: உயர் நீதிமன்றம் மறுப்பு

பொங்கல் பரிசுத்தொகை ரூ.1000 அளிக்கும் உயர் நீதிமன்ற உத்தரவில் சர்க்கரை மட்டும் பெறும் அட்டைதாரர்களுக்கும் அளிக்கும் வகையில் உத்தரவை மாற்ற தமிழக அரசின் முறையீட்டை ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக அரிசி, வெல்லம், கரும்பு, முந்திரி பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இவற்றுடன் இணைத்து ரூ.1000 பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது.

அனைத்து வகையான குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தது.

இந்நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் டேனியல் ஜேசுதாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அனைவருக்கும் ஏன் பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது, வசதி உள்ளவர்கள், அரசு தலைமை வழக்கறிஞர் என ஏன் எல்லோருக்கும் பொங்கல் பரிசுத்தொகை கொடுக்கப்பட வேண்டும்?

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் கொடுத்தால் போதாதா? பணமாகக் கொடுப்பதற்குப் பதிலாக நல்ல சாலை, அடிப்படை வசதிகள், மருத்துவம் ஆகியவற்றை எங்களுக்கு கொடுங்கள். கொள்கை முடிவு என்றால் யாரும் கேட்க முடியாது என அர்த்தமா?

பொங்கல் பொருட்கள் மட்டுமே இதுவரை கொடுத்த நிலையில் இப்போது ஏன் ரொக்கமும் சேர்க்கப்படுகிறது? என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், "கொள்கை முடிவின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. அரசு நிதியிலிருந்துதான் வழங்கப்படுகிறது. அட்டைதாரர்கள் மட்டுமே பயோமெட்ரிக் முறையில் தொகையைப் பெற முடியும். 5 வகையான அட்டைதாரர்கள் உள்ளனர்" என தெரிவித்தார்.

இதையடுத்து, இது தொடர்பாக தமிழக அரசு, கூட்டுறவு துறை ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டும் ரேஷன் பொருட்களை அனைத்தையும் பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தவிர பொருட்கள் வேண்டாம் என தெரிவிக்கும் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பணம் தரக்கூடாது எனவும் உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த உத்தரவை மாற்றம் செய்ய வேண்டும் எனவும், சர்க்கரை அட்டைகள் பெறுபவர்களுக்கும் பரிசுப்பணம் வழங்க மாற்றம் செய்யவேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் மனோகர் நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் முறையீட்டை செய்தார்.

அவரது முறையீட்டில், “அரசு அறிவித்துள்ள 1000 ரூபாய் பரிசுத்தொகையில் ஏற்கெனவே பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள் தவிர சர்க்கரை மட்டும் போதும் என பெற்று வரும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசின் பரிசுத்தொகை வழங்க உத்தரவை மாற்றியமைக்கவேண்டும்.

ஏனென்றால் சர்க்கரை மட்டும் போதும் என பெற்றுவருபவர்களும் பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளவர்களாக உள்ளனர், ஆகவே அவர்களுக்கும் அரசின் பரிசுத்தொகை 1000 ரூபாய் வழங்கும் வகையில் உத்தரவை மாற்றி அமைக்கவேண்டும்.” என கோரியிருந்தார்.

அவரது முறையீட்டை கேட்ட நீதிபதிகள் அமர்வு, தற்போதைக்கு உத்தரவில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என தெரிவித்து உத்தரவை மாற்றி அமைக்கக்கோரி மனுவாக தாக்கல் செய்தால் மனு என்றைக்கு விசாரணைக்கு வருகிறதோ அப்போது எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

தற்போதுள்ள உத்தரவில் மாற்றம் எதுவும் செய்ய முடியாது உத்தரவை மாற்றி அமைக்கமுடியாது என நீதிபதிகள் அமர்வு தெரிவித்துவிட்டனர். 

Google+ Linkedin Youtube