சென்னையில் கொத்தடிமையாக விற்கப்பட்ட வாரணாசி சிறுவர்கள் 9 பேர் அதிரடியாக மீட்பு: உரிமையாளர் தலைமறைவு

சென்னையில் கொத்தடிமையாக விற்கப்பட்ட வாரணாசியைச் சேர்ந்த 9 சிறுவர்களை சென்னை குழந்தைகள் அமைப்பினர் புகாரின்பேரில் போலீஸார் மீட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர்கள் கொத்தடிமையாக விற்கப்பட்டதாக புகார் எழுந்தது. சென்னை கொண்டித்தோப்பு பாஷியக்காரலு நாயுடுத்தெருவில் முன்னாலால் (50) என்பவர் பானிப்பூரி தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.

இவரது நிறுவனத்தில்தான் கொத்தடிமையாக பலரும் வேலை செய்து வந்துள்ளனர். இதில் சுதீஷ் (40) கொத்தடிமைத் தொழிலாளி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தப்பித்து தனது சொந்த ஊரான வாரணாசிக்கு சென்றார். அங்கு சென்ற அவர் அங்குள்ள சில தொண்டு நிறுவனங்களிடம் தனது நிலையையும், தன்னைப்போல் உத்தரப்பிரதேசம் வாரணாசியைச் சேர்ந்த ஏராளமான குழந்தைகள் கொத்தடிமைகளாக அங்கு பணி புரிவதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து அங்குள்ள தொண்டு நிறுவனம் உடனடியாக சென்னையில் உள்ள ஐஜேஎம் எனும் கொத்தடிமை மீட்பு தொண்டு நிறுவனத்திடம் தெரிவிக்க, அதன் சென்னை அமைப்பாளர் சாம் மற்றும் சமூக ஆர்வலர் ஜலீல் என்பவர்கள் மூலம் உடனடியாக வருவாய்த்துறை அதிகாரி தலைமையில் தொழிலாளர் நலத்துறை, குழந்தைகள் நல அமைப்பு மற்றும் போலீஸார் உதவியுடன் கொண்டித்தோப்பில் உள்ள பானிபூரி தயாரிக்கும் முன்னாலால் நிறுவனத்தில் அதிரடியாக சோதனையிட்டனர்.

அப்போது அங்கு கொத்தடிமையாக இருந்த ஜான்பூர் மாவட்டம் நிஷான்பூரைச் சேர்ந்த கோவிந்த் (18) மற்றும் ஜான்பூர், வாரணாசி, மாவட்டத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் மீட்கப்பட்டனர். போலீஸார் வருவதை அறிந்து உரிமையாளர் முன்னாலால் தலைமறைவாகிவிட்டார்.

அவரது மகன் ராஹுல்லாலை போலீஸார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாலாலை போலீஸார் தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்கள் போலீஸாரிடம் தெரிவித்ததில் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் தாங்கள் வேலை வாங்கப்பட்டதாகவும், ஒரு சிறிய அறையில் தங்கள் அனைவரையும் படுக்கவைத்ததாகவும் தெரிவித்தனர்.

தங்களுக்கு உடல் நலம் சரியில்லாமல் போனால் மருத்துவரிடம் அழைத்துச் சென்று அந்த செலவையும் தங்களது குறைந்த கூலியில் எடுத்துக்கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். தங்கள் பெற்றோரிடம் 2000 மற்றும் 3000 ரூபாய் கொடுத்து தங்களை சென்னைக்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பானிபூரி விற்பனை, டீ விற்பனை என சிறுவர்கள் வடமாநிலத்திலிருந்து அழைத்து வரப்பட்டு கொடுமைப்படுத்தப்படுவதாக புகார்கள் வந்தாலும் சோதனைகள் நடத்தப்படுவதில்லை. சென்னையில் சாதாரணமாக இதுபோன்ற பானிபூரி, குல்பி ஐஸ், ஸ்டீல் பாத்திரம் தயாரிப்பு, மெக்கானிக் கடைகள் போன்றவைகளில் சிறுவர்கள் வேலை வாங்கப்படுவதும் நடக்கிறது.

அதற்கென இருக்கும் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் சோதனை மேற்க்கொள்வதில்லை என்பது நடைமுறையில் உள்ளதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

Google+ Linkedin Youtube