உலக வங்கியின் புதிய தலைவர் இவாங்கா ட்ரம்ப்?

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, புதிய தலைவராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் மகள் இவாங்கா ட்ரம்ப் அமர்த்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலக வங்கியின் தலைவர் ஜிம் யோங் கிம், தனது பதவிக்காலம் முடிய இன்னும் மூன்று ஆண்டுகள் உள்ள நிலையில் பதவி விலகுவதாக திடீரென அறிவித்தார். ஜனவரி 31  அன்று அவர் தனது பதவியிலிருந்து விலகுகிறார்.

இந்நிலையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இவாங்கா ட்ரம்ப் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே ஆகியோர் முன்னணியில் உள்ளனர்.

இதுகுறித்துக் கூறிய கருவூலத் துறையின் செய்தித் தொடர்பாளர், குறிப்பிடத் தகுந்த எண்களில் தலைவர் பதவிக்காக பரிந்துரைகள் வந்துள்ளன. தகுந்த நபரைத் தேர்வு செய்வதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக கவர்னருடன் பணியாற்ற உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இரண்டாவது உலகப்போர் முடிவடையும்போது தொடங்கப்பட்ட உலக வங்கியில், அதன் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கர்களாகவே இருந்து வருகின்றனர். உலக வங்கியில் அமெரிக்கா மிகப்பெரிய பங்குதாரராக விளங்குகிறது. இது டொனால்ட் ட்ரம்ப்ப், அவரது சொந்த விருப்பத்தில் உலக வங்கியின் தலைவரை நியமிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது.

இவாங்கா ட்ரம்ப்பின் பின்னணி

மாடலாக தன்னுடைய கேரியரைத் தொடங்கிய இவாங்கா, பின்னர் தொழிலில் கால் பதித்தார். தந்தையின் நிறுவனத்தில் நிர்வாகத் துணைத் தலைவராக இருந்தவர், தற்போது வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்புக்கு ஆலோசகராக இருந்துவருகிறார்.

முன்னதாக 2017-ல் உலக வங்கி, பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், 1 பில்லியன் டாலர்களை அளித்ததன் பின்னணியில் இவாங்கா ட்ரம்ப் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Google+ Linkedin Youtube