அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸை விவாகரத்து செய்வதன் மூலம் உலகின் முதல் பணக்காரப் பெண்ணாகிறார் மக்கின்சி

அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் மற்றும் அவரது மனைவி மக்கின்சி டட்டில் இருவரும் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்துள்ளனர். இதன்மூலம், அமேசான் நிறுவனத்தில் ஜெஃப் பிசோஸ் வைத்திருக்கும் பங்கில் பாதி சட்டப்படி மக்கின்சிக்குச் சொந்தம் என்பதால், உலகின் முதல் பணக்காரப் பெண் என்ற இடத்தைப் பிடிப்பார் எனத் தகவல வெளியாகியுள்ளது.

அமேசான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று. அமேசான் நிறுவனத்தைத் தொடங்கிய நிறுவனர் ஜெஃப் பிசோஸ் அந்த நிறுவனத்தில் 16 சதவீத பங்குகள் வைத்துள்ளார். அவற்றின் மதிப்பு 136 பில்லியன் டாலர். தற்போது ஜெஃப் பிசோஸும்,அவரது மனைவி மக்கின்சியும் தங்களது 25 ஆண்டுகால மணவாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதாக, வெளிப்படையாக அறிவித்து விட்டார்கள். இந்நிலையில், சட்டப்படி ஜெஃப் பிசோஸுக்குச் சொந்தமான சொத்துகளில் பாதியளவு, மனைவி மக்கின்சிக்குச் சொந்தமாக உள்ளது. அதில்அமேசான் நிறுவனத்தில் ஜெஃப் பிசோஸ் வைத்துள்ள பங்குகளும் அடங்கும். எனவே பங்குகளில் பாதியளவு மனைவி மக்கின்சிக்குக் கொடுக்கப்படும்பட்சத்தில் 68 பில்லியன் டாலர்சொத்துக்கு மக்கின்சி உரிமையாளராவார். இதன் மூலம் உலகின் மிகப்பெரிய பணக்காரப் பெண்ணாக அவர் மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

ஜெஃப் பிசோஸ் அமேசான் நிறுவன அதிபராகவும், பெரிய கோடீஸ்வரராகவும் ஆவதற்கு முன்பே, நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். 1994-ல் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் இருவரின் திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் தற்போது தங்களது விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர். அமேசான் நிறுவனத்தின் தொடக்கம் மற்றும் அடுத்தடுத்த அசுர வளர்ச்சி போன்றவற்றில் கணிசமான பங்களிப்பு மக்கின்சிக்கும் உண்டு. ஆனால், அமேசான் நிறுவனத்தில் பங்குதாரராக அவர் இல்லை. தற்போது அமேசான் நிறுவனத்தின் 8 சதவீத பங்குகள் அவர் வசம் செல்ல உள்ள நிலையில், இந்தமுடிவு நிறுவனத்தின் நிர்வாக விவகாரங்களில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறதுஎன்பது இனிவரும் காலங்களில்தான் தெரியும். இருவரும் சுமுகமாக செல்லும்பட்சத்தில் நிறுவனத்தின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இருவரும் விவகாரத்து ஆகும் செய்தி வெளியான அன்று அமேசான் நிறுவனப் பங்குகள் ஏற்றமடைந்து வர்த்தகமாயின. ஆனால், அடுத்த நாள் வர்த்தகத்தில் இறக்கத்தைச் சந்தித்தன.

Google+ Linkedin Youtube