ரோஹித் சதம் cமுயற்சிகளை விரயமாக்கிய ரிச்சர்ட்ஸன் பந்து வீச்சு: ஆஸ்திரேலியா அபார வெற்றி

சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 34 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்று முன்னிலை பெற்றுள்ளது.

கடைசி 7 ஓவர்களில் 80 ரன்களைக் கொடுத்ததும், பிற்பாடு இறங்கி பெஹெண்டார்ப், ரிச்சர்ட்ஸன் ஆகிய வீச்சாளர்களிடம் மடமடவென விக்கெட்டுகளை இழந்து தவண், கோலி, ராயுடு விறுவிறுவென வெளியேறி 4/3 என்று சரிவு கண்டதையடுத்து எழும்ப முடியவில்லை. தோனி, ரோஹித் சர்மா கூட்டணி பழைய பாணி கிரிகெட்டை ஆடியது, தோனிக்கு மேட்ச் பிராக்டீஸ் இல்லாததால், கடினமான இந்தப் பிட்சில் ஓவர் பிட்ச், ஷார்ட் பிட்ச், ஆஃப் வாலி பந்துகளைக் கூட அவரால் சிங்கிள் கூட எடுக்க முடியாமல் திணறியதைப் பார்க்க முடிந்தது, மிகப்பெரிய ஹிட்டர் இப்படி தாத்தாவாக தொள தொளவென்று ஆடியதைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

தடுப்பாட்டமும் பார்க்க நன்றாக இல்லை, மிகவும் கரடுமுரடாக இருந்தது. ஆனால் எப்படியோ நிற்க வேண்டும் என்ற உறுதி அவருக்கு ஒரு அரிய அரைசதத்தைப் பெற்றுத்தந்தது. இவர் தொடக்கத்தில் ஆடியதை வைத்துப் பார்க்கும் போது ஆஸ்திரேலியர்களும் அவரை வீழ்த்த முயற்சி எடுக்கவில்லை என்று தெரிந்தது, இவரை வைத்து அதிகம் டாட்பால்களை வீசிவிட்டால், தேவைப்படும் ரன் விகிதத்தை அதிகரித்து விடலாம் என்ற அவர்களது திட்டத்தை தோனி எந்த விதத்திலும் உடைக்கவில்லை, உடைக்க முயற்சி செய்யவில்லை. பந்தைப் பார் அடி என்பதுதான் ஒருநாள், டி20 சித்தாந்தம், அடிக்க வேண்டிய பந்துகளை அடிக்க முடியாமல் திணறும்போது பிற்பாடு எப்படி அடிக்க முடியாத பந்துகளை அடிக்க முடியும்,?  அடிக்க வேண்டிய பந்துகளையே அடிக்க முடியாமல்தான் போகும்.

இதனால் ரோஹித் சர்மாவின் ரிதமும் தொய்வடைந்தது. விராட் கோலி பரிசளிப்பு நிகழ்ச்சியில் கூறியது போல், ரோஹித்திற்கு ஆதரவளித்தார் சரி ஆனால் ஆட்டத்தின் ’டெம்ப்போ’ இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பாக இருந்திருக்க வேண்டும் என்று அபிப்ராயப் பட்டார், அது உண்மைதான். ஆனால் தோனிக்கு தவறான முறையில் எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டது, ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது என்பதுதான் உண்மை.

முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 288 ரன்களைக் குவிக்க இந்திய அணி 254/9 என்று முடிந்தது. ரிச்சர்ட்ஸன் மிகப்பிரமாதமாகப் புதிய பந்திலும் பிறகு டெத் ஓவர்களையும் வீசி 26 ரன்களுக்கு 4 விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் ஆஸ்திரேலிய அணிக்கு இவர் ஒரு புதிய கண்டுபிடிப்புதான், ஏனெனில் இவர் ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். இவரை வைத்து திட்டங்கள் தீட்ட முடியும்.

முதலில் அபாய தொடக்க வீரர் ஷிகர் தவண், பெஹ்ரெண்டாஃபின் 6வது பந்தில் பிரமாதமான ஒரு ‘ஏழைகளின் அகரம் ரக’ இன்ஸ்விங்கரில் ஷிகர் தவணை எல்.பியாக்கினார், அவர் டக் அவுட். 4வது ஓவரில் ரிச்சர்ட்சன் விராட் கோலிக்கு பொறி வைத்து ஆன் திசையில் அருகில் பீல்டரை வைத்து லெக் ஸ்டம்ப் ஆஃப் வாலி பந்தில் வீழ்த்தினார், அதை அடிக்க கோலியின் ஆவலைத் தூண்டினார். கோலி இயல்பூக்கமாக பிளிக் செய்தார், நேராக ஸ்டாய்னிஸ் கையில் உட்கார்ந்தது, செட்-அப் செய்து கோலியை வீழ்த்தினார்.  அதே ஓவரில் அம்பாத்தி ராயுடு வேகமாக உள்ளே வந்த பந்து கால்காப்பைத் தாக்கியது, ராயுடு கொஞ்சம் ஸ்லோ. எல்.பி.ஆனார், அதோடு ரிவியூவையும் விரயம் செய்து வெளியேறினார். 4/3 என்று இந்தியா தடுமாறியது.

தோனிக்கு மோசமான தீர்ப்பு; ராயுடு ரிவியூவைக் காலி செய்ததால் ரிவியூ செய்ய முடியாத வேதனை:

தோனி களமிறங்கி ரோஹித்துடன் இணைந்து மறுகட்டுமான பணியை மேற்கொண்டனர், இதில் சில ஆஃப் வாலி, ஷார்ட் பிட்ச் பந்துகளைக் கூட தோனியினால் ஒரு ரன்னைக் கூட அடிக்க முடியவில்லை, இதனால் ஸ்ட்ரைக்ர் ரொடேட் செய்யப்படாததால் ரோஹித் ஒரு முனையில் முடங்கினார். முன்னதாக ஃப்ரீ ஹிட்டில் ஒரு சிக்ஸரை பெஹெண்டார்பை மிக அருமையான பிளிக் ஷாட்டில் ப்ரீ ஹிட்டில் அடித்த ரோஹித், பிறகு பீட்டர் சிடிலை ஒரு புல்ஷாட்டில் சிக்ஸ் அடித்தார்.  தோனி நேதன் லயனை பொறுத்தது போதும் என்று 25 நாற்காலி வரிசைகள் தள்ளி விழுமாறு லாங் ஆனில் ஒரு சிக்ஸ் விளாசினார், பீட்டர் சிடிலை ஒரு பவுண்டரி அடித்தார், ஆனால் அதற்கு முன்பாக ஏகப்பட்ட டாட்பால்கள்.  10 ஒவர்களில் 21 ரன்கள் என்ற ரீதியில்தான் சென்று கொண்டிருந்தது. 

தோனி அடித்ததுதான் முதல் பவுண்டரி அதற்கு முன்பாகவே 4 சிக்சர்கள் அடிக்கப்பட்டு விட்டன.  பார்ட்னர்ஷிப் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து 30-வது ஓவர் வாக்கில் அதே கட்டத்தில் ஆஸ்திரேலிய அணியைக் காட்டிலும் 5 ரன்கள்தான் குறைவாக எடுத்திருந்தோம், இந்த நிலையில் இந்தக் கூட்டணி நம்பிக்கை அளிப்பதாக இருந்தது.  தோனி ஸ்டாய்னிஸ் பந்தை மிட் ஆனில் பவுண்டரி அடித்து அரைசதம் கண்டார். 96 பந்துகளில் 51 எடுத்த நிலையில் பெஹெண்டார்ப்பின் லெக் ஸ்டம்புக்கு வெளியே பிட்ச் ஆன பந்தில் எல்.பி.தீர்ப்பளிக்கப்பட்டார். அது நாட் அவுட், தவறான தீர்ப்பு... ரிவியூ காலியாகி விட்டதால் அவர் பெவிலியன் திரும்ப நேரிட்டது. இல்லையென்றால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கும்.

ரோஹித் சர்மாவும் தோனியும் சேர்ந்து 28 ஓவர்களில் 137 ரன்களைச் சேர்த்தனர். ரோஹித் சர்மாவின் ஆட்டம் ஆஸ்திரேலிய வெற்றிக்கு இடையூறாக இருந்து வந்தது, அவர் 129 பந்துகளில் 133 ரன்களை 10 பவுண்டரிகள் 4 பிரமாதமான சிக்சர்களுடன் எடுத்தார். ஆனால் அவர் அடித்துக் கொண்டிருந்தாலும் தேவைப்படும் ரன் விகிதம் ஓவருக்கு 12 ரன்களுக்கும் மேல் சென்று விட்டது. கடைசியில் 4.2 ஒவர்கள் இருக்கும் போது டீப்பில் கேட்ச் ஆகி களைப்படைந்த வீரராக வெளியேறினார். இன்று சரி சாத்து வாங்கிய மார்கஸ் ஸ்டாய்னிஸ் கடைசியில் ரோஹித் சர்மாவை வீழ்த்தினார்.

தோனி ஆட்டமிழந்த பிறகு 141/4 என்ற நிலையில் எப்படி ஆடுவது என்பதில் தினேஷ் கார்த்திக்குச் சிக்கல் இருந்தது அவரும் 12 ரன்கள் எடுத்து ரிச்சர்ட்சன் பந்தில் மட்டையில் பட்டு பவுல்டு ஆனார். ஜடேஜா எல்லைக்கோட்டருகில் 8 ரன்களுக்கு காலியானார். கடைசியில் புவனேஷ்வர் குமார் 23 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் எடுத்து நம்பிக்கையுடன் ஆடினார், ஆனால் அப்போதே அல்ல இதற்கு 5 ஒவர்கள் முன்னரே போட்டி முடிந்து விட்டது.  கடைசியில் 254/9 என்று இந்தியா முடிவடைந்து தோல்வி அடைந்தது.

ரிச்சர்ட்சன் ஆட்டநாயகன்.

Google+ Linkedin Youtube