'வேளாண்கடன் தள்ளுபடியை தேர்தல் வெற்றிக்காக பயன்படுத்துகிறார்கள்': காங்கிரஸ் மீது பிரதமர் மோடி சாடல்

விவசாயிகளுக்கு வழங்கும் வேளாண் கடன் தள்ளுபடியை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்துகிறார்கள் என காங்கிரஸ் கட்சியை பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று ரூ.3,500 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முன்னதாக லடாக் பகுதியில் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கல் நாட்டி அங்கு நடந்த கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

அதன்பின் ஜம்மு நகரில் பல்வேறு வளர்ச்சித்திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். விஜய்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசியதாவது:

தேசத்துக்கு அத்தியாவசியமான , உணர்வுப்பூர்வமான விஷயங்களை கடந்த காலத்தில் ஆட்சி செய்த அரசுகள் புறந்தள்ளிவிட்டன. கர்தார்பூர் விஷயத்தை எடுத்துக்கொண்டால், அதில் முந்தைய அரசு கவனம் செலுத்தினார்களா, குரு நானக் தேவ் பிறந்த இடம் நமது தேசத்துக்கு சொந்தமானது, அதை தாரைவார்த்துவிட்டார்கள்.

நாங்கள் ஒவ்வொருவருக்கும் ஜன் தன் வங்கிக்கணக்கை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். ஆனால், இதை எதிர்க்கட்சிகள் கேலி செய்கிறார்கள். ஆனால், ஜன்தன் வங்கிக் கணக்குகள் எப்படிப் பயன்படப்போகிறது இப்போது தெரியும். எதிர்காலத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் 3 தவணைகளாக ஜன் தன் கணக்கில் சேர்க்கப்படும். ஏறக்குறைய ரூ.75 ஆயிரம் கோடி விவசாயிகள் வங்கிக்கணக்கிற்கு மாற்றப்படும். இதில் எந்த இடைத்தரகருக்கும் வேலையில்லை. முந்தைய அரசிடம் எந்தவிதமான உதவியும் பெறாத கோடிக்கணக்கான விவசாயிகளுக்கு இப்போது உதவி செய்கிறோம்.

காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்கு அறிவித்துள்ள வேளாண் கடன் தள்ளுபடியால் பலனில்லை. அது இடைத்தரகர்களுக்குத்தான் செல்லும். 10 ஆண்டுகளுக்கு முன் 2008-09ம் ஆண்டு விவசாயிகளுக்கு வேளாண் கடன் தள்ளுபடியாக ரூ.6 லட்சம் கோடியை காங்கிரஸ் கட்சியினர் அறிவித்தார்கள். ஆனால், தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின் விவசாயிகளுக்கு ரூ.52 ஆயிரம் மட்டுமே கடன் தள்ளுபடி செய்து, விவசாயிகளை ஏமாற்றினார்கள்.

மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் விசாரணை நடத்தியதில், 35 லட்சம் பேர் வரை கடன் தள்ளுபடி தேவையில்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசின் கஜானாவை யார் காலி செய்தது எனக் கூறுங்கள்.

மத்தியப்பிரதேச மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சி விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி அறிவித்தது. ஆனால் அங்கு என்ன நடந்தது. விவசாயிகளுக்கு 13 ரூபாய்க்கு காசோலை வழங்கப்பட்டது.

விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி எனும் விஷயத்தைத் தேர்தலில் வெற்றஇ பெறுவதற்காகவே காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Google+ Linkedin Youtube